போடிமெட்டு மலைப்பாதையில் மண் சரிவு - போக்குவரத்து பாதிப்பு


போடிமெட்டு மலைப்பாதையில் மண் சரிவு - போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 18 Nov 2019 3:15 AM IST (Updated: 17 Nov 2019 11:02 PM IST)
t-max-icont-min-icon

தொடர் மழை காரணமாக போடிமெட்டு மலைப்பாதையில் திடீர் மண் சரிவு ஏற்பட்டது. இதன்காரணமாக அந்த சாலையில் 9 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

போடி, 

போடி பகுதியில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. போடி மேற்கு தொடர்ச்சி மலை பகுதியிலும் தொடர்ந்து விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள பல்வேறு கிராமங்களில் மழைநீர் வெள்ளமென கரைபுரண்டு ஓடியது. தொடர் மழை காரணமாக குளம், குட்டைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதற்கிடையே தொடர் மழை காரணமாக போடிமெட்டு மலைப்பாதையில் நேற்று முன்தினம் நள்ளிரவு புலியூத்து அருவிக்கு மேல் 11-வது கொண்டை ஊசி வளைவில் திடீரென்று மண் சரிவு ஏற்பட்டது. மண் சரிவினால் சாலை முழுவதும் மண் மூடியது. இதனால் போடிமெட்டு மலைப்பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்த குரங்கணி போலீசார் போடிமெட்டு வழியாக கேரளாவுக்கு செல்லும் அனைத்து வாகனங்களையும் போடி முந்தல் சோதனை சாவடியிலேயே நிறுத்தினர். இதேபோல் கேரளாவில் இருந்து வந்த வாகனங்களை போடிமெட்டு மலை கிராமத்தில் உள்ள சோதனை சாவடியில் நிறுத்தினர். இதனால் போடிமெட்டு மலைப்பாதையில் 9 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையடுத்து நேற்று காலை தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் பொக்லைன் எந்திரத்தை வரவழைத்து மண் சரிவால் ஏற்பட்ட மண்ணை அப்புறப்படுத்தினர். அதன்பிறகு அந்த மலைப்பாதையில் போக்குவரத்து தொடங்கியது. முதலில் ஜீப், வேன் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது. அதன்பின்னர் பஸ் போக்குவரத்து தொடங்கியது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தோட்டத் தொழிலாளர்கள் அதிகம் செல்லவில்லை. இதனால் போக்குவரத்து சீரமைப்பதில் சிரமம் ஏற்படவில்லை என்று குரங்கணி போலீசார் தெரிவித்தனர்.
1 More update

Next Story