போடி அருகே, ஆற்றில் மூழ்கி மாணவர் பலி - காப்பாற்ற முயன்ற உறவினர் கதி என்ன?


போடி அருகே, ஆற்றில் மூழ்கி மாணவர் பலி - காப்பாற்ற முயன்ற உறவினர் கதி என்ன?
x
தினத்தந்தி 17 Nov 2019 10:45 PM GMT (Updated: 17 Nov 2019 6:50 PM GMT)

போடி அருகே கொட்டக்குடி ஆற்றில் மூழ்கி மாணவர் பலியானார். அவரை காப்பாற்ற முயன்ற உறவினர் கதி என்ன? என்று தெரியவில்லை.

போடி,

தேனி மாவட்டம் போடி சர்ச் தெருவை சேர்ந்தவர் பால்ராஜ். கூலித்தொழிலாளி. அவருடைய மகன் முத்தரசன் (வயது 15). இவர், அங்குள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். முத்தரசனின் நண்பர்கள் தினேஷ்பாண்டி (15), நரேஷ் (11).

இவர்கள் 3 பேரும் நேற்று விடுமுறை தினம் என்பதால் போடியை அடுத்த சன்னாசிபுரம் பகுதியில் கொட்டக்குடி ஆற்றில் கரைபுரண்டு ஓடும் தண்ணீரை வேடிக்கை பார்த்தனர். பின்னர் முத்தரசன் உள்பட 3 பேரும் ஆற்றில் இறங்கி மீன் பிடித்தனர். அப்போது முத்தரசன் ஆற்றின் சுழலில் சிக்கிக்கொண்டார்.

இதனைக்கண்ட தினேஷ்பாண்டியும், நரேசும் அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. முத்தரசன் தண்ணீரில் மூழ்கினார். இதுகுறித்து 2 பேரும், ஓடிச்சென்று அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். இதுதொடர்பாக போடி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் ஆற்றில் மூழ்கிய மாணவரை மீட்க தயாராகினர். அப்போது அங்கு வந்த முத்தரசனின் சித்தப்பாவும், ஆட்டோ டிரைவருமான பரமசிவம் (45), மாணவரை மீட்பதற்காக ஆற்றில் குதித்தார். ஆனால் அவரும், தீயணைப்பு துறையினர் கண் எதிரே சுழலில் சிக்கி தண்ணீரில் மூழ்கினார்.

இதனையடுத்து கூடுதல் தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு ஆற்றில் மூழ்கிய முத்தரசனையும், பரமசிவத்தையும் தேடும் பணியில் ஈடுபட்டனர். இதில் மாணவர் முத்தரசன் உடல் மட்டும் மீட்கப்பட்டது. தொடர்ந்து பரமசிவத்தை தேடும் பணி நடைபெற்று வருகிறது. அவரது கதி என்ன ஆனது? என்று தெரியவில்லை.

இதுபற்றி தகவல் அறிந்த போடி தாசில்தார் மணிமாறன், போடி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மர் ஆகியோர் பார்வையிட்டு மீட்பு பணியை துரிதப்படுத்தினர். தொடர்ந்து அப்பகுதியில் கனமழை பெய்ததால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பரமசிவத்தை தேடும் பணியில் சிரமம் ஏற்பட்டது. இருப்பினும் மீட்பு பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இதுகுறித்து குரங்கணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story