விழுப்புரம், கலெக்டர் அலுவலகத்தில் குழந்தையுடன் பெண் தீக்குளிக்க முயற்சி
திருமணம் செய்து ஏமாற்றிய கிராம நிர்வாக அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் குழந்தையுடன் பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று வாராந்திர மக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டரை சந்தித்து மனு கொடுப்பதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர். மனு கொடுக்க வரும் பொதுமக்கள் ஏதேனும் அசம்பாவித சம்பவத்தில் ஈடுபடுவதை தடுக்க கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாக பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
போலீசாரின் கண்காணிப்பையும் மீறி விழுப்புரம் பரசுரெட்டிப்பாளையம் காலனி கெங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராஜா மனைவி பூவழகி (வயது 27) என்பவர் தனது குழந்தை யுவந்திகாவுடன் (3) கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் முன்பு வந்து திடீரென தான் வைத்திருந்த மண்எண்ணெய் கேனை திறந்து தன் மீதும், குழந்தை மீதும் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார்.
இதை சற்றும் எதிர்பாராத போலீசார் சுதாரித்துக்கொண்டு பூவழகி கையில் வைத்திருந்த தீப்பெட்டியை பிடுங்கினர். பின்னர் அவர் மீதும், குழந்தையின் மீதும் தண்ணீரை ஊற்றினர். அதன் பிறகு பூவழகியை, கூடுதல் கலெக்டர் ஸ்ரேயா பி.சிங்கிடம் அழைத்துச்சென்றனர். அவரிடம் பூவழகி கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:–
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு எனது கணவர் ராஜா (30) என்னை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நாங்கள் கடலூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு திருமணம் செய்து கொண்டோம். எங்களுக்கு யுவந்திகா என்ற பெண் குழந்தை உள்ளது. திருமணம் ஆன நாள் முதல் எனது கணவர் என்னை அவரது வீட்டிற்கு அழைத்துச்செல்லாமல் எங்கள் வீட்டிலேயே விட்டு விட்டார். உங்கள் வீட்டிற்கு அழைத்துச்செல்லுங்கள் என்று அவரிடம் நான் பலமுறை கூறினேன். ஆனால் அவர் என்னை அவரது வீட்டுக்கு அழைத்து செல்லாமல் ஏமாற்றி விட்டு, வேறொரு பெண்ணை திருமணம் செய்வதற்கு முடிவு செய்துள்ளார்.
இப்போது என்னுடைய கணவர் ராஜா காவணிப்பாக்கம் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். இதுபற்றி மாவட்ட கலெக்டர், மாவட்ட வருவாய் அலுவலர், கோட்டாட்சியர், தாசில்தார் ஆகியோருக்கு பலமுறை மனு கொடுத்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே நானும், எனது குழந்தையும் அவருடன் சேர்ந்து வாழ நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.
மனுவை பெற்றுக்கொண்ட கூடுதல் கலெக்டர் ஸ்ரேயா பி.சிங், இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
கலெக்டர் அலுவலகத்தில் குழந்தையுடன் பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் விழுப்புரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story