கல்லாறு- குன்னூர் இடையே, தண்டவாளத்தில் 23 இடங்களில் மண்சரிவு - ஊட்டி மலைரெயில் 24-ந் தேதி வரை ரத்து
கல்லாறு- குன்னூர் இடையே ரெயில் தண்டவாளத்தில் 23 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் ஊட்டி மலைரெயில் 24-ந் தேதி வரை ரத்து செய்யப்பட்டு உள்ளது.
மேட்டுப்பாளையம்,
நீலகிரி மாவட்டத்தில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் மேட்டுப் பாளையம் - ஊட்டி மலைரெயில் பாதையில் அடிக்கடி மண்சரிவு மற்றும் பாறைகள் விழுகின்றன. இதனால் மலைரெயில் போக்குவரத்து ரத்து செய்யப்படுகிறது. நீலகிரி மேற்கு தொடர்ச்சி மலை காடுகளில் கடந்த 15-ந் தேதி இரவு பெய்த கனமழை காரணமாக மேட்டுப்பாளையம்- ஊட்டி மலைரெயில் பாதையில் அடர்லி- ஹில்குரோவ் ரெயில் நிலையங்கள் இடையே மண்சரிவு ஏற்பட்டு தண்டவாளத்தில் பாறாங்கற்கள் உருண்டு விழுந்தன.
இதனால் 16, 17, 18-ந் தேதி ஆகிய 3 நாட்கள் மலைரெயில் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து தண்டவாளத்தில் சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடந்தது.
இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக பெய்த மழை காரணமாக மேட்டுப்பாளையம்- ஊட்டி மலை ரெயில் பாதையில் கல்லாறு- குன்னூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே 23 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. இதுபோல் ஆங்காங்கே ரெயில் தண்டவாளத்தில் பாறைகள் மற்றும் மரக்கிளைகள் விழுந்து கிடக்கின்றன. இது குறித்து சேலம் ரெயில்வே கோட்ட உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து வருகிற 24- ந் தேதி வரை மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே மலைரெயில் போக்குவரத்தை ரத்து செய்து சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது.
Related Tags :
Next Story