கடன் தொல்லையால் வி‌ஷம் குடித்து கணவன்-மனைவி தற்கொலை - வேதாரண்யத்தில் பரிதாபம்


கடன் தொல்லையால் வி‌ஷம் குடித்து கணவன்-மனைவி தற்கொலை - வேதாரண்யத்தில் பரிதாபம்
x
தினத்தந்தி 20 Nov 2019 3:30 AM IST (Updated: 19 Nov 2019 7:06 PM IST)
t-max-icont-min-icon

வேதாரண்யத்தில் கடன் தொல்லையால் வி‌ஷம் குடித்து கணவன்–மனைவி தற்கொலை செய்து கொண்டனர்.

வேதாரண்யம்,

நாகை மாவட்டம் வேதாரண்யம் மோட்டாண்டி தோப்பை சேர்ந்தவர் வேதராசு (வயது59). இவர் மணியன்தீவு கடல் மீனவர் கூட்டுறவு சங்க இயக்குனராக இருந்து வந்தார். இவருடைய மனைவி வசந்தா (57). இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி விட்டது. மகன்கள் கணவருடன் வெளியூரில் வசித்து வருகின்றனர். மகன் மோட்டாண்டி தோப்பில் மனைவியுடன் தனியாக வசித்து வருகிறார். வேதராசும், வசந்தாவும் தனியாக வசித்து வந்தனர்.

வேதராசு குடும்ப செலவுக்காக பலரிடம் கடன் வாங்கி உள்ளார். இந்த கடனை திரும்பி செலுத்த முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். கடன் தொல்லையால் மனமுடைந்த காணப்பட்ட அவர், இனி வாழ்வதை விட சாவதே மேல் என்று தனது மனைவி வசந்தாவிடம் தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து கணவன்–மனைவி 2 பேரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர்.

அதன்படி நேற்று முன்தினம் இரவு வீட்டில் வேதராசும், வசந்தாவும் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமரன், சப்–இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடன் தொல்லையால் வி‌ஷம் குடித்து கணவன்–மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story