தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு, இலவம் மரக்கிளைகளுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் - வனத்துறையை கண்டித்து கோஷம்


தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு, இலவம் மரக்கிளைகளுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் - வனத்துறையை கண்டித்து கோஷம்
x
தினத்தந்தி 19 Nov 2019 10:30 PM GMT (Updated: 19 Nov 2019 2:53 PM GMT)

தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு, வனத்துறையை கண்டித்து இலவம் மரக்கிளைகளுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தேனி,

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் கண்ணன் தலைமையில், வருசநாடு பகுதியை சேர்ந்த விவசாயிகள் சிலர் தேனி கலெக்டர் அலுவலகத்துக்கு ஆட்டோக்களில் வந்தனர். அவர்கள் தங்களுடன் இலவம் மரக்கிளைகளை கொண்டு வந்திருந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு, இலவம் மரக்கிளைகளை கையில் தூக்கிப்பிடித்தப்படி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, வனத்துறை அதிகாரிகளை கண்டித்து அவர்கள் கோஷங்களை எழுப்பினர். விவசாயிகள் வளர்த்த இலவம் மரங்களை வெட்டிய வனத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதுகுறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கூறியதாவது:-

வருசநாடு அருகே முறுக்கோடை ஊராட்சிக்கு உட்பட்ட வாழவந்தான்புரம், எருமைச்சுனை, நந்தனாபுரம் ஆகிய பகுதிகளில் 3 தலைமுறைக்கும் மேலாக வனப்பகுதியில் பலர் விவசாயம் செய்து வருகின்றனர்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வறட்சியால் இலவம் மரங்கள் பட்டுப் போயின. அவ்வாறு பட்டுப்போன மரங்களுக்கு பதில் புதிதாக மரக்கன்றுகள் நட்டு வளர்க்கப்பட்டன. ஆனால் 1½ ஆண்டுக்கும் மேலாக வளர்ந்து வந்த மரங்களையும், காய்க்கும் தருவாயில் இருந்த மரங்களையும் வனத்துறையினர் வெட்டி அழித்து விட்டனர்.

5 விவசாயிகளின் தோட்டத்தில் இருந்த 300 மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. இதுகுறித்து நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.

பின்னர் அவர்கள் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜாவிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.

இதையடுத்து தேனியில் உள்ள மேகமலை வன உயிரின காப்பாளர் அலுவலகத்துக்கு விவசாயிகள் சென்றனர். அங்கு அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மீண்டும் ஆர்ப்பாட்டம் செய்த விவசாயிகள், வனத்துறை அதிகாரிகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டம் செய்த விவசாயிகளை, மேகமலை வன உயிரின காப்பாளர் சச்சின் போஸ்லின் துக்காராம் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்தார். அதன்பேரில் விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story