18-ம் கால்வாயில் பாசனத்துக்காக தண்ணீர் திறப்பு


18-ம் கால்வாயில் பாசனத்துக்காக தண்ணீர் திறப்பு
x
தினத்தந்தி 19 Nov 2019 10:30 PM GMT (Updated: 19 Nov 2019 2:57 PM GMT)

18-ம் கால்வாயில் இருந்து பாசனத்துக்காக தண்ணீரை கலெக்டர் பல்லவி பல்தேவ் திறந்து வைத்தார்.

தேவாரம்,

தேவாரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள விளைநிலங்கள் பாசன வசதி பெறும் வகையில், 18-ம் கால்வாய் திட்டம் கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் அந்த பகுதியில் உள்ள 44 கண்மாய்கள் பயன்பெறுகின்றன. 18-ம் கால்வாய்க்கு லோயர்கேம்ப் முல்லைப்பெரியாற்றில் இருந்து தண்ணீர் திறக்கப்படுகிறது.

இதற்கிடையே போடி பகுதியை உள்ள விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு கடந்த ஆண்டு தேவாரம் சுத்தகங்கை ஓடையில் இருந்து 18-ம் கால்வாய் திட்டம் நீட்டிக்கப்பட்டது.

அதன்படி 16 கிலோ மீட்டர் தூரத்துக்கு கால்வாய் வெட்டப்பட்டு பொட்டிபுரம், ராமகிருஷ்ணாபுரம், சிலமலை, ராசிங்காபுரம், மேலசொக்கநாதபுரம், போடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 15-க்கும் மேற்பட்ட கண்மாய்களுக்கு தண்ணீர் கொண்டு செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்தநிலையில் 18-ம் கால்வாயில் நீட்டிப்பு செய்யப்பட்ட பகுதிகளுக்கு தண்ணீர் திறக்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்தார். அதன்பேரில் 18-ம் கால்வாயில் இருந்து தேவாரம் சுத்தகங்கை ஓடையில் உள்ள மதகுகளை இயக்கி கலெக்டர் பல்லவி பல்தேவ் தண்ணீரை திறந்து வைத்தார்.

பின்னர் அவர் கூறும்போது, தேவாரம், பொட்டிபுரம் ஆகிய கிராமங்களில் உள்ள நிலங்களும், போடி, ராசிங்காபுரம், சிலமலை, மேலசொக்கநாதபுரம் பகுதிகளில் உள்ள நிலங்களும் பாசன வசதி பெறும் வகையில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 585 கிணறுகளின் நீர்மட்டம் உயர்ந்து 3 ஆயிரத்து 848.55 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

இதேபோல் 7 குளங்களுக்கு உட்பட்ட 946.16 ஏக்கர் நிலங்களும் பயனடையும். தற்போது திறந்து விடப்பட்ட தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி குறுகிய கால பயிர்களை நடவு செய்து பயனடைய வேண்டும் என்றார்.

இந்த நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை (நீர்வள ஆதார அமைப்பு) செயற்பொறியாளர் சுந்தரப்பன், உதவி செயற்பொறியாளர் கார்த்திகேயன், 18-ம் கால்வாய் விவசாயிகள் சங்க தலைவர் ராமராஜ், துணைத்தலைவர் காளிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர். நேற்று முதல் 15 நாட்களுக்கு, தினமும் 95 கனஅடி வீதம் 18-ம் கால்வாயில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Next Story