போலி இன்ஸ்பெக்டராக வலம் வந்த வாலிபர் கைது கார், போலி அடையாள அட்டைகள் பறிமுதல்


போலி இன்ஸ்பெக்டராக வலம் வந்த வாலிபர் கைது கார், போலி அடையாள அட்டைகள் பறிமுதல்
x
தினத்தந்தி 21 Nov 2019 4:45 AM IST (Updated: 20 Nov 2019 10:46 PM IST)
t-max-icont-min-icon

ஒட்டன்சத்திரத்தில் போலி இன்ஸ்பெக்டராக வலம் வந்த வாலிபர் சிக்கினார். அவரிடம் இருந்து கார், போலி அடையாள அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஒட்டன்சத்திரம்,

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியில் இன்ஸ்பெக்டர் என்று கூறி கொண்டு, வாகனத்தில் செல்பவர்களை மிரட்டுவது, அபராதம் விதிப்பது உள்ளிட்ட சம்பவங்களில் ஒருவர் ஈடுபடுவதாக ஒட்டன்சத்திரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார், போலி இன்ஸ்பெக்டரை பிடிக்க தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் தாராபுரம் சாலையில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு ஏற்கனவே போலீஸ் வாகனத்தை அருகில் நிறுத்திக் கொண்டு, போலீஸ் சீருடையில் ஒரு நபர் வாகன ஓட்டிகளிடம் விசாரணை நடத்தி கொண்டிருந்தார். இதனை கண்ட இன்ஸ்பெக்டர் சீனிவாசன், அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினார். அப்போது அவர் தன்னையும் போலீஸ் என்று கூறினார். இதற்கிடையே எந்த போலீஸ் நிலையத்தில் பணியாற்றுகிறீர்கள்? அடையாள அட்டையை காண்பியுங்கள் என்று போலீசார் கேட்டனர். அப்போது அவர் போலியான அடையாள அட்டையை காண்பித்தார். தொடர்ந்து போலீசார் விசாரிக்கவே, அவர் முன்னுக்குபின் முரணாக பதில் அளித்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டதில் அவர் போலி இன்ஸ்பெக்டராக வலம் வந்தது தெரியவந்தது.

மேற்கொண்டு அவரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளிவந்தன. அதன்படி, பிடிபட்ட நபர் ஒட்டன்சத்திரம் தாராபுரம் சாலை பகுதியில் வசித்து வரும் செல்வகணே‌‌ஷ் (வயது 31) என்பது தெரிய வந்தது. இவர் ஒட்டன்சத்திரம் பஸ் நிலையத்தில் கணினி பயிற்சி மையம் நடத்தி வந்தார். தற்போது அந்த பயிற்சி மையம் இல்லை. இதற்கிடையே நாகப்பட்டினம் மாவட்டம் திருவெண்காடு போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் விஜயகணே‌‌ஷ் என்பவரிடம் இருந்து சமீபத்தில் கார் ஒன்றை வாங்கியுள்ளார். பின்னர் அந்த காரின் முன்பக்கம் போலீஸ் என்று எழுத்துகளை பொறித்ததுடன், சைரன் விளக்குகள், வாக்கிடாக்கி உள்ளிட்டவற்றையும் பொருத்தினார். இதையடுத்து தன்னை போலீஸ் இன்ஸ்பெக்டர் என்று கூறி காரில் வலம் வந்துள்ளார். ஒட்டன்சத்திரம் பகுதியில் பழனி சாலை, திண்டுக்கல் சாலை, தாராபுரம் சாலை ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் போல் வலம் வந்ததுடன், வாகன ஓட்டிகளை மிரட்டுவது, அபராதம் வசூலிப்பது என பல்வேறு சம்பவங்களை அரங்கேற்றியுள்ளார். மேலும் செல்வகணேசிடம் அரசு ஊழியர், பத்திரிகையாளர் உள்பட பல்வேறு துறை அடையாள அட்டைகளும் இருந்தன.

இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து கார், போலி அடையாள அட்டைகளை பறிமுதல் செய்தனர். இவர் வேறு எங்கும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளாரா?, இதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story