கடையின் பூட்டை உடைத்து ரூ.80 ஆயிரம் பொருட்கள் திருட்டு மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு


கடையின் பூட்டை உடைத்து ரூ.80 ஆயிரம் பொருட்கள் திருட்டு மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
x
தினத்தந்தி 21 Nov 2019 4:30 AM IST (Updated: 20 Nov 2019 10:53 PM IST)
t-max-icont-min-icon

கறம்பக்குடி கட்டுமான பொருட்கள் விற்பனை கடையின் பூட்டை உடைத்து ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கறம்பக்குடி,

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியை சேர்ந்தவர் அபுபக்கர் சித்திக். இவர் செட்டித்தெரு குட்டைகுளம் அருகே கட்டுமான பொருட்கள் விற்பனை கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் கடையை பூட்டு விட்டு வீட்டிற்கு சென்றார். நேற்று காலை கடையை திறக்க வந்தபோது கடை ‌‌ஷட்டர்களின் பூட்டு உடைக்கப்பட்டு பெயர்க்கப்பட்டு இருந்தது. இதையடுத்து அவர் உள்ளே சென்று பார்த்த போது, கடையில் இருந்த 2 மடிக்கணினி, 4 மின்மோட்டார், வயர்கள், மின்சாதன பொருட்கள், ரூ.2 ஆயிரம் போன்றவற்றை மர்மநபர்கள் திருடி சென்றுள்ளது தெரியவந்தது. திருடப்பட்ட பொருட்களின் மதிப்பு ரூ.80 ஆயிரம் இருக்கும்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து அபுபக்கர் சித்திக் கறம்பக்குடி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். மேலும் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் முகத்தை துணியால் மூடியபடி 3 பேர் பொருட்களை திருடும் காட்சிகள் இருந்தன. இதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் நேற்று கறம்பக்குடி அருகே உள்ள செவ்வாய்பட்டியில் சந்திரசேகரன் என்பவருக்கு சொந்தமான 4 ஆடுகளையும் மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர் திருட்டு; போலீசார் திணறல்

கறம்பக்குடி செட்டித்தெரு பகுதியில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அடுத்தடுத்து 5 கடைகளில் தொடர் திருட்டு நடைபெற்றது. இதில் கண்காணிப்பு கேமரா காட்சிகள் இருந்தும் திருடர்களை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதேபோல் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து மதுபாட்டில்களை திருடி சென்ற மர்மநபர்களையும் இன்னும் கண்டுபிடிக்கவில்லை. இதை தவிர அவ்வப்போது நடைபெறும் சிறு திருட்டுகளை கூட துப்பு கிடைக்காமல் போலீசார் திணறி வருகின்றனர்.

Next Story