ரூ.2 ஆயிரம் நோட்டு செல்லாது என மதுரையை சேர்ந்தவர்களிடம் ரூ.79 லட்சம் மோசடி


ரூ.2 ஆயிரம் நோட்டு செல்லாது என மதுரையை சேர்ந்தவர்களிடம் ரூ.79 லட்சம் மோசடி
x
தினத்தந்தி 20 Nov 2019 11:15 PM GMT (Updated: 20 Nov 2019 8:27 PM GMT)

ரூ.2 ஆயிரம் நோட்டு செல்லாது என்று கூறி மதுரையை சேர்ந்தவர்களிடம் ரூ.79 லட்சத்தை மோசடி செய்து காரில் தப்பி சென்றவர்களை போலீசார் வலைவீசி வருகின்றனர்.

பெரம்பலூர்,

ரூ.2 ஆயிரம் நோட்டை செல்லாது என்று மத்திய அரசு அறிவிக்க இருப்பதாகவும், அதனால் ரூ.2 ஆயிரம் நோட்டுகள் இருந்தால் ரூ.500 நோட்டுகளாக மாற்றிக்கொள்ளலாம் என்றும், அதற்கு கூடுதலாக கமி‌‌ஷன் தொகை தரப்படும் அல்லது பணத்தை கொடுத்தால் அதனை வட்டிக்கு விட்டு, அதிக லாபம் தருவதாகவும் பெரம்பலூர் எசனை பாப்பாங்கரையை சேர்ந்த சுரே‌‌ஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் மதுரையை சேர்ந்த சிலரிடம் கூறியதாக தெரிகிறது.

இதனை நம்பி பிலிக்ஸ் என்பவர் மூலம் மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே உள்ள ஊமச்சிகுளத்தை சேர்ந்த மூக்கையா மகன் மும்மூர்த்தி (வயது 28), மதுரை நடராஜ் நகரை சேர்ந்த சவுந்தரபாண்டியன் (42) ஆகியோர் பிலிக்சுடன் சேர்ந்து ஒரு காரில் ரூ.16 லட்சத்து 80 ஆயிரத்தையும், மற்றொரு காரில் மதுரை ஜெய்ஹிந்தபுரம் சுக்ராம் நகரை சேர்ந்த பால்சாமி மகன் கார்த்தி (29), மதுரை அவனியாபுரம் சிவசாமி மகன் லட்சுமணன் (32), வினோத் (31) ஆகியோர் ரூ.62 லட்சத்தையும் எடுத்துக் கொண்டு பெரம்பலூருக்கு புறப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

ரூ.79 லட்சம் மோசடி

இந்நிலையில் திருச்சியில் வைத்து மும்மூர்த்தி உள்ளிட்ட 3 பேர் சென்ற காரில் ஒரு நபர் ஏறி உள்ளார். அவர்கள் 4 பேரும் பெரம்பலூர் பாலக்கரை ரவுண்டானா அருகே உள்ள பிரபல ஓட்டலுக்கு நேற்று முன்தினம் மாலை வந்துள்ளனர். அவர்களை தொடர்ந்து கார்த்தி உள்ளிட்ட 3 பேரும் அதே ஓட்டலுக்கு வந்தனர். அவர்களிடம் சுரே‌‌ஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் பேசிக்கொண்டிருந்தனர்.

பின்னர், தனது அலுவலகம் இருக்கும் இடமான பெரம்பலூர் நான்கு ரோட்டிற்கு அவர்கள் 7 பேரையும் சுரே‌‌ஷ் அழைத்து சென்றார். அன்று இரவு சவுந்தரபாண்டியன், மும்மூர்த்தி, கார்த்தி ஆகியோர் சாப்பிடுவதற்காக நான்கு ரோடு அருகே உள்ள சாலையோர கடைக்கு சென்றனர். அப்போது லட்சுமணன், சவுந்தரபாண்டியனுக்கு போன் செய்து சுரே‌‌ஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் என்னையும், என்னுடன் இருந்த வினோத், பிலிக்ஸ் மற்றும் உடன் வந்த இன்னொரு நபரையும் ஆயுதங்களை காட்டி மிரட்டி, ஓட்டலில் வைத்திருந்த ரூ.78 லட்சத்து 80 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு ஒரு காரில் தப்பி சென்று விட்டதாகவும், தற்போது நாங்கள் 4 பேரும் மற்றொரு காரில் அவர்களை பின்தொடர்ந்து சென்று கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

போலீசார் குழப்பம்

இதனால் அதிர்ச்சியடைந்த சவுந்தரபாண்டியன், மும்மூர்த்தி, கார்த்தி ஆகியோர் பெரம்பலூர் போலீஸ் நிலையத்திற்கு புகார் கொடுக்க சென்றனர். அவர்களிடம் பெரம்பலூர் சரக போலீஸ் துணை சூப்பிரண்டு கென்னடி மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகேசன் ஆகியோர் விசாரணை நடத்தினர். அவர்களிடம், இவ்வளவு பணம் எப்படி உங்களுக்கு கிடைத்தது, அதனை எதற்காக சுரேசிடம் கொடுக்க வந்தீர்கள் என்ற போலீசார் கேட்டதற்கு, அவர்கள் முன்னுக்கு, பின் முரணாக பதில் அளித்ததால் போலீசார் குழப்பம் அடைந்தனர்.

சுரே‌ஷின் செல்போன் நம்பரை ஆய்வுசெய்து பார்த்தபோது அது சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியை காட்டியதாகவும், அதன்பிறகு செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு விட்டதாகவும், சுரே‌‌ஷ் கூட்டாளிகளை பின்தொடர்ந்து விரட்டி சென்ற 4 பேரின் செல்போன்களும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

கார் பறிமுதல்

இதையடுத்து சுரே‌‌ஷ் கூட்டாளிகளின் 3 மோட்டார் சைக்கிள்கள், சவுந்தரபாண்டியன், மும்மூர்த்தி, பிலிக்ஸ் ஆகியோர் வந்த கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். தலைமறைவாக உள்ள சுரே‌‌ஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் மற்றும் அவர்களை பிடிக்க சென்ற லட்சுமணன், வினோத், பிலிக்ஸ் உள்ளிட்ட 4 பேரையும் பிடித்தால் மட்டுமே மேற்கண்ட சம்பவம் தொடர்பாக உண்மை நிலவரம் தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர். இதனால் அவர்களை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து வலைவீசி தேடி வருகின்றனர்.

சுரே‌‌ஷ், ஆன்லைனில் கோடிக்கணக்கில் மோசடி செய்ததாக பெரம்பலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் ஜாமீனில் வெளிவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

Next Story