பெரியகுளத்தில் பரபரப்பு: காரில் மெக்கானிக் கடத்தல் - 3 பேர் கைது


பெரியகுளத்தில் பரபரப்பு: காரில் மெக்கானிக் கடத்தல் - 3 பேர் கைது
x
தினத்தந்தி 22 Nov 2019 4:00 AM IST (Updated: 21 Nov 2019 8:05 PM IST)
t-max-icont-min-icon

பெரியகுளத்தில் காரில் மெக்கானிக்கை கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

பெரியகுளம்,

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நாயுடுபுரத்தை சேர்ந்தவர் விஜய் (வயது 25). கார் மெக்கானிக். மதுரையை சேர்ந்தவர் கார்த்தி (25). கார் புரோக்கர். இவரிடம், விற்பனை செய்து தருவதாகக்கூறி கார் ஒன்றை கடந்த சில மாதங்களுக்கு முன்பு விஜய் வாங்கினார். மேலும் ரூ.20 ஆயிரத்தையும் அவர் பெற்று கொண்டதாக கூறப்படுகிறது.

ஆனால் அவர் காரை விற்று கொடுக்கவில்லை. இதேபோல் தான் வாங்கிய பணத்தையும் கார்த்தியிடம் திருப்பி கொடுக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் விஜய்க்கும், கார்த்திக்கும் முன்விரோதம் ஏற்பட்டது. இந்தநிலையில் கொடைக்கானலில் இருந்து தேனி மாவட்டம் பெரியகுளத்துக்கு விஜய் வந்தார். பின்னர் அங்கு தயாளன் என்பவரின் ஒர்க்ஷாப்பில் வேலைக்கு சேர்ந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த கார்த்தி மற்றும் அவருடைய நண்பர்கள் இசக்கிராஜா (28), கணேஷ் (28) ஆகியோர் பெரியகுளத்துக்கு காரில் வந்தனர். பின்னர் நைசாக பேசி அவர்கள் 3 பேரும், விஜயை திடீரென காரில் கடத்தி சென்று விட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைக்கண்ட தயாளன், பெரியகுளம் தென்கரை போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.

இதனையடுத்து மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். இதுமட்டுமின்றி திண்டுக்கல், மதுரை மாவட்ட போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இதற்கிடையே மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே கார் சென்று கொண்டிருந்தது.

அப்போது அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் அந்த காரை மடக்கி பிடித்தனர். பின்னர் காரில் கடத்தப்பட்ட விஜய் மீட்கப்பட்டார். அவரை கடத்திய 3 பேரும் பிடிபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த தென்கரை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். இதனையடுத்து விஜய் மற்றும் அவரை கடத்திய கார்த்தி, இசக்கிராஜா, கணேஷ் ஆகியோர் தென்கரை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயை கடத்திய 3 பேரையும் கைது செய்தனர்.

Next Story