பாலீஷ் செய்து தருவதாக கூறி, பெண்ணிடம் 4 பவுன் நகைகள் நூதன திருட்டு - வடமாநிலத்தை சேர்ந்த 2 பேர் கைவரிசை


பாலீஷ் செய்து தருவதாக கூறி, பெண்ணிடம் 4 பவுன் நகைகள் நூதன திருட்டு - வடமாநிலத்தை சேர்ந்த 2 பேர் கைவரிசை
x
தினத்தந்தி 22 Nov 2019 3:45 AM IST (Updated: 21 Nov 2019 9:50 PM IST)
t-max-icont-min-icon

நகைகளை பாலீஷ் செய்து தருவதாக கூறி பெண்ணிடம் 4 பவுன் நகைகளை வடமாநிலத்தை சேர்ந்த 2 பேர் நூதனமாக முறையில் திருடிச் சென்றனர்.

திருச்சி,

திருச்சி வரகனேரி அக்ரஹாரத்தை சேர்ந்தவர் சகிலாபானு(வயது 52). இவர் நேற்று காலை தனது மருமகளுடன் வீட்டில் இருந்தார். அங்கு வடமாநிலத்தை சேர்ந்த 2 பேர் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்கள் சகிலாபானுவிடம் குக்கரை பாலீஷ் செய்து தருவதாக கூறியதையடுத்து அவர் வீட்டில் இருந்த பழைய குக்கரை அவர்களிடம் கொடுத்தார். உடனே அதை புதிது போல் பாலீஷ் செய்து கொடுத்தனர்.

அதன்பிறகு வெள்ளி கொலுசை பாலீஷ் செய்து தருவதாக கூறி அதையும் பாலீஷ் செய்து கொடுத்தனர். பின்னர் தங்க நகைகள் இருந்தால் கொடுங்கள் புதிதுபோல் பாலீஷ் செய்து தருகிறோம் என்று கூறி உள்ளனர். இதனை நம்பி தான் அணிந்து இருந்த தங்கச் சங்கிலி, தோடு உள்பட 4 பவுன் நகைகளை சகிலாபானு கழட்டி கொடுத்தார். அந்த நகைகளை வாங்கிய 2 பேரும் அதை குக்கரில் போட்டு சிறிது மஞ்சள் தூளை கொட்டி கலக்குவதற்கு தண்ணீர் கேட்டுள்ளனர்.

அதன்படி, தண்ணீரை எடுத்து வந்து கொடுத்தார். மஞ்சள் தூளில் தண்ணீரை கலந்து குக்கரை மூடி 5 நிமிடம் அடுப்பில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும் என்று கூறி உள்ளனர். இதை நம்பி அவரும் அடுப்பில் வைத்து கொதிக்க வைத்தார். அதற்குள் வடமாநிலத்தை சேர்ந்த 2 பேரும் பக்கத்துக்கு வீட்டில் பாலீஷ் போட்டுவிட்டு வருவதாக கூறிவிட்டு 4 பவுன் நகைகளை நூதன முறையில் எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

சிறிதுநேரத்தில் சகிலாபானு அடுப்பை அணைத்துவிட்டு குக்கரில் நகைகளை தேடி உள்ளார். ஆனால் நகைகளை காணாது திடுக்கிட்டார். வீட்டின் வெளியே வந்து தேடி பார்த்தார். அங்கு யாரும் இல்லை. இதுகுறித்து காந்திமார்க்கெட் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

தொடர்ந்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, வடமாநிலத்தை சேர்ந்த 2 பேரையும் தேடி வருகிறார்கள்.

Next Story