பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கிய சத்துணவில் புழுக்கள் - சமூக வலைதளங்களில் வைரலாகும் புகைப்படம்


பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கிய சத்துணவில் புழுக்கள் - சமூக வலைதளங்களில் வைரலாகும் புகைப்படம்
x
தினத்தந்தி 21 Nov 2019 11:00 PM GMT (Updated: 21 Nov 2019 6:57 PM GMT)

பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கிய சத்துணவில் புழுக்கள் கிடக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தேனி,

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள சக்கம்பட்டியில் இந்து மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. தமிழக அரசின் சத்துணவு திட்டம் இந்த பள்ளியில் செயல்படுத்தப்படுகிறது. சத்துணவில் சாம்பார் சாதம் நேற்று வழங்கப்பட்டது.

இந்தநிலையில் அந்த பள்ளியில் வழங்கப்பட்ட சத்துணவில் புழுக்கள் இருந்ததாக புகைப்படங்கள் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதுகுறித்து தகவல் அறிந்த ஆண்டிப்பட்டி ஒன்றிய ஆணையாளர் ஆண்டாள் மற்றும் தேனி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விரைந்து சென்று ஆய்வு செய்தனர்.

மேலும் பள்ளியில் வழங்கப்பட்ட சாதம் மற்றும் சத்துணவு சாப்பிடும் பள்ளி மாணவ-மாணவிகள், பெற்றோர்கள், ஆசிரியர்களிடம் விவரங்கள் கேட்டனர்.

அதிகாரிகள் சத்துணவை சாப்பிட்டு பார்த்தனர். சமையலுக்கு பயன்படுத்தப்படும் அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை சோதனைக்காக எடுத்து சென்றனர். சத்துணவில் புழுக்கள் இருந்ததாக வலம் வரும் புகைப்படம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து பள்ளி நிர்வாகிகள் கூறும்போது, “எங்களது பள்ளியில் சுகாதாரமான முறையில் சத்துணவு தயாரித்து மாணவ-மாணவிகளுக்கு வழங்கி வருகிறோம். சத்துணவு சமையல், வினியோகத்தை கண்காணிக்க தினமும் 2 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பள்ளிக்கு வேண்டாத நபர்கள், இதுபோன்ற தவறான தகவலை பரப்பி வருகின்றனர். இதுகுறித்து பள்ளி நிர்வாகம் சார்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” என்றனர்.

Next Story