தஞ்சை சரபோஜி மார்க்கெட் 13-ந் தேதியுடன் மூடப்படுகிறது மாற்று இடம் ஒதுக்க வணிகர்கள் கோரிக்கை


தஞ்சை சரபோஜி மார்க்கெட் 13-ந் தேதியுடன் மூடப்படுகிறது மாற்று இடம் ஒதுக்க வணிகர்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 21 Nov 2019 11:00 PM GMT (Updated: 21 Nov 2019 7:24 PM GMT)

தஞ்சை சரபோஜி மார்க்கெட் வருகிற 13-ந் தேதியுடன் மூடப்படுகிறது. இந்த மார்கெட் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் ரூ.14½ கோடி செலவில் புதிதாக கட்டப்படுகிறது. இங்கு கடை வைத்திருப்பவர்களுக்கு மாற்று இடம் ஒதுக்க வேண்டும் என்று வணிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டியாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து ரூ.904 கோடி ஒதுக்கப்பட்டு 12 விதமாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் தஞ்சை பஸ் நிலையங்கள் சீரமைப்பு, பூங்காக்கள் மேம்பாடு, குடிநீர் மேம்பாட்டு பணிகள், திடக்கழிவு மேலாண்மை திட்டம், மின் விளக்கு வசதி உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக தஞ்சை காமராஜ் மார்க்கெட், சரபோஜி மார்க்கெட்டும் புதிதாக கட்டப்பட உள்ளது. முதல் கட்டமாக காமராஜ் மார்க்கெட் தற்காலிகமாக வேறு இடத்திற்கு மாற்றப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விரைவில் பணிகள் தொடங்கப்பட உள்ளன. அதேபோல கீழவாசலில் உள்ள சரபோஜி மார்க்கெட்டும் புதிதாக கட்டப்பட உள்ளது.

சரபோஜி மார்க்கெட்

தஞ்சையை மராட்டிய மன்னர்கள் ஆண்டபோது, குஜராத்தை சேர்ந்த வணிகர்கள் அரண்மனை கீழகோட்டை சுவர், அகழி அருகே துணி மற்றும் வாசனை பொருட்களை விற்பனை செய்தனர். பின்னர் அந்த இடத்துக்கு ‘‘குஜிலி மார்க்கெட்’’ என பெயர் வைத்தனர். அதன்பிறகு ஆட்சிக்கு வந்த ஆங்கிலேயர் காலத்தில் சரபோஜி மார்க்கெட் என பெயரிடப்பட்டது.

இந்த மார்க்கெட் 3 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இங்கு 26 நாட்டு மருந்து கடைகள், 16 அரிசி கடைகள், 120 மளிகை கடைகள், எண்ணெய், காய்கறி கடை என மொத்தம் 356 கடைகள் உள்ளன. இங்கு அனைத்து வகை பொருட்களும் மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ரூ.14½ கோடி

இந்த நிலையில் மத்திய அரசின் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் சரபோஜி மார்க்கெட்டில் உள்ள அனைத்து கடைகளும் இடிக்கப்பட்டு, அங்கு ரூ.14 கோடியே 59 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கடைகள் கட்டப்பட உள்ளது. மொத்தம் 309 கடைகள் கட்டப்படுகின்றன. 4 லாரிகள், 10 நான்கு சக்கர வாகனங்கள், 52 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் வாகன நிறுத்துமிடமும், குடிநீர் வசதி, ஏ.டி.எம். மையம், கண்காணிப்பு கேமரா வசதி, தீயணைப்பு வசதி, கழிவறை வசதிகளும் செய்யப்படுகின்றன.விரைவில் பணிகள் தொடங்க உள்ளதால், இதனை காலி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டது. இதற்கிடையில் சரபோஜி மார்க்கெட் வணிகர்கள் சங்கத்தின் சார்பில் சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அதில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் கடைகள் கட்டப்படும் வரை மாநகராட்சி சார்பில் மாற்று இடம் வழங்க வேண்டும், கடைகள் கட்டி முடிக்கப்பட்ட பின் தற்போது உள்ள வணிகர்களுக்கே கடைகள் வழங்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தனர்.

13-ந்தேதியுடன் மூடல்

இந்த மனு கடந்த 13-ந் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தை செயல்படுத்த ஏதுவாக அடுத்த மாதம் (டிசம்பர்) 13-ந் தேதிக்குள் கடைகளை வணிகர்கள் காலிசெய்துவிட வேண்டும் எனவும், அதற்குள் மேல்முறையீடு செய்து தீர்வு காணலாம் என உத்தரவிட்டனர். அதன்படி மார்க்கெட் 13-ந் தேதியுடன் மூடப்படுகிறது. இந்த நிலையில் ஐகோர்ட்டில் 2 நீதிபதிகள் அமர்வுக்கு வணிகர் சங்கத்தினர் மேல்முறையீடு செய்துள்ளனர்.

இதற்கிடையில் தஞ்சாவூர் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தற்போது, ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெறவுள்ளதால், வருகிற 14-ந்தேதி முதல் சரபோஜி மார்க்கெட் இயங்காது என அறிவிப்பு பலகையை வைத்துள்ளனர்.


Next Story