உள்ளாட்சி தேர்தலில் ரஜினிகாந்த் பிரசாரத்தில் ஈடுபட்டால் அ.தி.மு.க.விற்கு பாதிப்பு ஏற்படாது அமைச்சர் பேட்டி


உள்ளாட்சி தேர்தலில் ரஜினிகாந்த் பிரசாரத்தில் ஈடுபட்டால் அ.தி.மு.க.விற்கு பாதிப்பு ஏற்படாது அமைச்சர் பேட்டி
x
தினத்தந்தி 22 Nov 2019 4:30 AM IST (Updated: 22 Nov 2019 1:43 AM IST)
t-max-icont-min-icon

உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தில் ரஜினிகாந்த் ஈடுபட்டால் அ.தி.மு.க.விற்கு பாதிப்பு ஏற்படாது என அமைச்சர் தங்கமணி கூறினார்.

சேந்தமங்கலம்,

சேந்தமங்கலம் வசந்த மஹால் திருமண மண்டபத்தில் முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தின் கீழ் சேந்தமங்கலம் மற்றும் கொல்லிமலை தாலுகா பகுதிகளை சேர்ந்த 1,127 பயனாளிகளுக்கு வருவாய்த்துறை மூலம் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. விழாவுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன் வரவேற்றார். முன்னாள் எம்.பி. பி.ஆர்.சுந்தரம், கலெக்டர் மெகராஜ், சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை உள்பட பல்வேறு துறைகள் மூலம் 1,127 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 84 லட்சத்து 34 ஆயிரத்து 645 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி, சமூகநலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜா ஆகியோர் வழங்கி பேசினர்.

சட்டக்கல்லூரி

விழாவில் அமைச்சர் தங்கமணி பேசியதாவது:-

தமிழகத்தில் கூடுதலாக 5 லட்சம் பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்குவதற்கு ஏற்பாடு செய்து வருகிறோம். தகுதியுள்ள பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் தற்போது 8 ஆயிரம் பேருக்கு உதவித்தொகை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாமக்கல், சேலம், தேனி ஆகிய மாவட்டங்களில் சட்டக்கல்லூரியும், நாமக்கல் மாவட்டத்திற்கு மருத்துவம் மற்றும் சட்டக்கல்லூரி ஆகியவை ஒரே நேரத்தில் கட்டுவதற்கும் ஏற்பாடு நடந்து வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் சரோஜா பேசும்போது, ராசிபுரத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்கவேண்டும் என்று கூறினார். அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. நாமக்கல் நகராட்சிக்கு என்று தனி குடிநீர் திட்டம் நடந்து வந்தது. அது முடியும் தருவாயில் உள்ளது. முதியோர் உதவித்தொகை கேட்டு வரும் பயனாளிகள் இல்லாத மாவட்டமாக நாமக்கல் மாவட்டத்தை உருவாக்கவேண்டும். எனவே வருவாய் துறையினர் கிராமப்புறங்களில் அதற்காக முழு ஈடுபாட்டுடன் பணியாற்ற வேண்டும். இவ்வாறு அமைச்சர் தங்கமணி பேசினார்.

நிகழ்ச்சியில் சேந்தமங்கலம் தாசில்தார் ஜானகி, கொல்லிமலை தாசில்தார் ராஜ்குமார், சேந்தமங்கலம் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் ஜி.பி.வருதராஜன், துணை செயலாளர் ஜி.கே.வீரப்பன், பேரூர் செயலாளர் ராஜேந்திரன், இணை செயலாளர் நாகலட்சுமி, பேரூராட்சி முன்னாள் துணை தலைவர் ரமே‌‌ஷ், ஒன்றிய மீனவரணி செயலாளர் பாஸ்கரன், அக்கியம்பட்டி ஊராட்சி மன்ற முன்னாள் துணை தலைவர் ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

ரஜினிகாந்த்

பின்னர் அமைச்சர் தங்கமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, உள்ளாட்சி தேர்தலை சந்திக்க அ.தி.மு.க. பயப்படுகிறதா? என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதைக்கேட்ட அமைச்சர், அ.தி.மு.க. 100 சதவீதம் வெற்றி பெறும். மறைமுக தேர்தல் குறித்து எதிர்கட்சியினர்தான் பயந்து வருகின்றனர் என்றார்.

தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டால் அ.தி.மு.க.வுக்கு பாதிப்பு ஏற்படுமா? என்ற கேள்விக்கு, அவரால் அ.தி.மு.க.விற்கு பாதிப்பு ஏற்படாது என்று அமைச்சர் தெரிவித்தார்.


Next Story