நெல்லையில் கொன்று புதைக்கப்பட்ட பெண்ணின் எலும்புகள் தோண்டி எடுப்பு: கள்ளக்காதலன் கைது-திடுக்கிடும் தகவல்கள்


நெல்லையில் கொன்று புதைக்கப்பட்ட பெண்ணின் எலும்புகள் தோண்டி எடுப்பு: கள்ளக்காதலன் கைது-திடுக்கிடும் தகவல்கள்
x
தினத்தந்தி 21 Nov 2019 11:15 PM GMT (Updated: 21 Nov 2019 8:41 PM GMT)

நெல்லையில் கொன்று புதைக்கப்பட்ட பெண்ணின் எலும்புகள் தோண்டி எடுக்கப்பட்டன. இது தொடர்பாக அந்த பெண்ணின் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை,

நெல்லை டவுன் செபஸ்தியார் கோவில் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 20), ராமையன்பட்டியை சேர்ந்தவர் ஆசீர்செல்வம் (32). இவர்கள் 2 பேரையும் கொலை மிரட்டல் சம்பவம் தொடர்பாக போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் டவுன் போலீஸ் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தியபோது திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. அதாவது, கோவையை சேர்ந்த இளம்பெண் ஒருவரை கொலை செய்து புதைத்து விட்டதாக தெரிவித்தனர்.

சேரன்மாதேவி அருகே உள்ள சக்திகுளத்தை சேர்ந்தவர் சிவா என்ற சிவகுமார் (வயது 36). இவருக்கும், கோவையை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. அந்த பெண்ணை சிவக்குமார் கடந்த 2012-ம் ஆண்டு நெல்லைக்கு அழைத்து வந்து குடும்பம் நடத்தினார். அப்போது 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதால், அந்த பெண்ணை கொலை செய்தார். அவருக்கு உதவியாக நாங்கள் சேர்ந்து அந்த பெண்ணின் உடலை புதைத்து விட்டோம் என்ற அதிர்ச்சி தகவலை தெரிவித்தனர். இந்த சம்பவம் நடந்தது தச்சநல்லூர் போலீஸ் நிலைய எல்கை என்பதால் அதுகுறித்து டவுன் போலீசார் தகவல் தெரிவித்தனர். அதே நேரத்தில் மணிகண்டன், ஆசீர்செல்வம் ஆகியோரை பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

இதுகுறித்து தச்சநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வனசுந்தர் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினார். அதில், கொலை சம்பவம் நடந்த பிறகு சிவா மும்பைக்கு சென்று அங்கு வேலை செய்து வருவது தெரியவந்தது. இந்த நிலையில் சிவா நேற்று சொந்த ஊருக்கு வந்தார். அவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், சிவா கொலை செய்தது நெல்லை பகுதியை சேர்ந்த பெண் என்பதும், கள்ளக்காதல் பிரச்சினையில் கொலை நடந்ததும் தெரியவந்தது.

அதாவது, நெல்லை ரெட்டியார்பட்டி பகுதியில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் புஷ்பா (25). விதவையான இவர் பீடி சுற்றும் தொழில் செய்து வந்தார். அவர், நெல்லையில் உள்ள பீடி கம்பெனிக்கு தான் தயாரித்த பீடிகளை ஒப்படைக்க வந்து செல்வார். அப்போது புஷ்பாவுக்கும், சிவாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. அவர் கள் பல்வேறு இடங்களுக்கு சுற்றித்திரிந்து உள்ளனர்.

இந்த நிலையில் புஷ்பா தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு சிவாவிடம் வற்புறுத்தினார். ஆனால் சிவா தனக்கு ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தைகள் இருப்பதால், உன்னை திருமணம் செய்து கொள்ள முடியாது என்று கூறி மறுத்து விட்டார். இந்த நிலையில் கடந்த 2012-ம் ஆண்டு மே மாதம் புஷ்பா தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி சிவாவிடம் மீண்டும் வற்புறுத்தினார்.

இதையடுத்து புஷ்பாவை கொலை செய்தால்தான் தன்னால் தப்பிக்க முடியும் என்று சிவா முடிவெடித்தார். இதற்காக டவுன் பகுதியை சேர்ந்த தியாகு என்ற மாரி, மாங்கா என்ற வெங்கடேஷ், மணிகண்டன், ஆசீர் செல்வம் ஆகியோரின் உதவியை நாடி உள்ளார். சம்பவத்தன்று இரவு புஷ்பாவை ஒரு ஆட்டோவில் நயினார்குளம் வடக்கு கரை வாய்க்கால் பகுதிக்கு சிவா அழைத்து சென்றார். அங்கு தயார் நிலையில் இருந்த கும்பலோடு சேர்ந்து கயிற்றை கொண்டு புஷ்பாவின் கழுத்தை இறுக்கி கொலை செய்தனர். பின்னர் வாய்க்கால் கரையில், அங்குள்ள சாஸ்தா கோவில் பின்புறம் புஷ்பாவின் உடலை புதைத்து விட்டனர். அதன்பிறகு இதுகுறித்து வெளியே சொல்லாமல் மறைத்து விட்டது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து, கைது செய்யப்பட்ட சிவாவை போலீசார் நேற்று காலை நயினார்குளம் வடக்கு பகுதி வாய்க்கால் கரைக்கு அழைத்து வந்தனர். அங்கு அவர் புஷ்பாவின் உடலை புதைத்த இடத்தை அடையாளம் காட்டினார். இதையடுத்து நெல்லை தாசில்தார் பாலசுப்பிரமணியன் முன்னிலையில் உடலை தோண்டி எடுக்கும் பணி தொடங்கியது. முதலில் கம்பி, மண்வெட்டி மூலம் தோண்டும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. பின்னர் பொக்லைன் எந்திரம் மூலம் தோண்டும் பணி நடைபெற்றது.

மாலை 5 மணியளவில் ஒரு இடத்தில் புஷ்பாவின் எலும்புகள் கிடைத்தன. அவற்றை மருத்துவக்குழுவினர் சேகரித்து பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த பணியை நெல்லை டவுன் போலீஸ் உதவி கமிஷனர் சதீஷ்குமார், தச்சநல்லூர் இன்ஸ்பெக்டர் வனசுந்தர் மற்றும் போலீசார் கண்காணித்தனர். இதையொட்டி அந்த பகுதியில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

இந்த வழக்கில் தொடர்புடைய சிவா, மணிகண்டன், ஆசீர்செல்வம் ஆகியோரை போலீசார் கைது செய்து உள்ளனர். வெங்கடேஷ் இறந்து விட்டார். தியாகுவை போலீசார் தேடி வருகின்றனர்.

நெல்லையில் கொன்று புதைக்கப்பட்ட பெண்ணின் எலும்புகள் தோண்டி எடுக்கப்பட்ட சம்பவம் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் புஷ்பா குறித்த முழுமையான தகவல்களை சிவா கூறவில்லை. அதுகுறித்து அவரிடம் போலீசார் கேட்டபோது ரெட்டியார்பட்டி பகுதியை சேர்ந்த ஒரு மதம், ஒரு சமூகத்தை சேர்ந்த பெண் என்று மட்டும் கூறினார். அவருடைய குடும்ப விவரம் உள்ளிட்ட வேறு எதுவும் தனக்கு தெரியாது என்று கூறிவிட்டார்.

இதையடுத்து அவர் கூறிய அடையாளங்களின் அடிப்படையில் ரெட்டியார்பட்டி, மூலைக்கரைப்பட்டி, பேய்குளம் பகுதிகளில் போலீசார் விசாரணை நடத்தினர். புஷ்பா குறித்து எந்த போலீஸ் நிலையத்திலும் புகார் அளிக்கப்படாததால் போலீசார் குழப்பத்தில் உள்ளனர்.

Next Story