ஹுலியாரில் முழு அடைப்பு போராட்டம் மடாதிபதியிடம் மந்திரி மாதுசாமி கண்ணீர்விட்டு அழுதார்


ஹுலியாரில் முழு அடைப்பு போராட்டம் மடாதிபதியிடம் மந்திரி மாதுசாமி கண்ணீர்விட்டு அழுதார்
x
தினத்தந்தி 21 Nov 2019 10:41 PM GMT (Updated: 21 Nov 2019 10:41 PM GMT)

குருப சமூக மடாதிபதி பற்றி சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த மாதுசாமியை கண்டித்து ஹுலியாரில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. அவர் பதவி விலக வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளனர். இந்த நிலையில் மடாதிபதியை சந்தித்த மந்திரி மாதுசாமி கண்ணீர்விட்டு அழுதார்.

துமகூரு,

துமகூரு மாவட்டம் சிக்கநாயக்கனஹள்ளி தாலுகாவில் ஹுலியார் நகரம் அமைந்துள்ளது. அங்குள்ள ஒரு சர்க்கிளுக்கு கனகதாசர் பெயர் சூட்டப்பட்டு இருந்தது. இதற்கான பெயர் பலகையும் அந்த சர்க்கிளில் வைக்கப்பட்டிருந்தது. அந்த பெயர் பலகை கடந்த 12-ந் தேதி ஒரு பிரிவினரால் அகற்றப்பட்டது. இதற்கு குருப சமூகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு குருப சமூகம் மற்றும் இன்னொரு பிரிவினருக்கு இடையே மோதல் போக்கு ஏற்படும் நிலை உருவானது.

இதையடுத்து சட்டத்துறை மந்திரியும், துமகூரு மாவட்ட பொறுப்பு மந்திரியுமான மாதுசாமி தலைமையில் அமைதி கூட்டம் ஹுலியார் நகரில் சமீபத்தில் நடைபெற்றது. இதில் குருப சமூகத்தின் காகினெலே மடாதிபதி நிரஞ்சனானந்தபுரி சுவாமி கலந்துகொண்டார். அந்த கூட்டத்தில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் மந்திரி மாதுசாமி, அந்த மடாதிபதியை தரக்குறைவாக ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது. இதற்கு குருப சமூக மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மாதுசாமி கூறிய கருத்திற்காக முதல்-மந்திரி எடியூரப்பா நேற்று முன்தினம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார். மேலும், அந்த சர்க்கிளுக்கு கனகதாசர் பெயரே சூட்டப்படும் என்றும் அவர் அறிவித்தார். எக்காரணம் கொண்டு முழு அடைப்பு அல்லது போராட்டங்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார். இருப்பினும் மடாதிபதியை தரக்குறைவாக பேசிய மந்திரி மாதுசாமியை கண்டித்து ஹுலியாரில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.

மந்திரி மாதுசாமி பதவி விலக கோரி, குருப சமூகத்தினர், ஹுலியாரில் நேற்று ஊர்வலம் நடத்தினர். மாதுசாமி ராஜினாமா செய்ய கோரி கோஷங்களை எழுப்பினர். அப்போது பெயர் பலகை அகற்றப்பட்ட அந்த சர்க்கிளில் கனகதாசர் சர்க்கிள் என்ற பெயர் பலகையை அவர்கள் நிறுவினர். கடைகள் அடைக்கப்பட்டதால், பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். சாலையில் டயர்களுக்கு தீவைத்து எரித்து தங்களின் ஆக்ரோஷத்தை வெளிப் படுத்தினர்.

முழு அடைப்பையொட்டி ஹுலியாரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடை பெறாமல் அமைதி நிலை நிலவியது. போராட்டத்திற்கு பிறகு, குருப சங்க நிர்வாகிகள் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “எங்கள் சமூகத்தின் மடாதிபதியை மந்திரி மாதுசாமி தரக்குறைவாக பேசி அவமதித்துவிட்டார். எனவே அவர் ராஜினாமா செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அவர் ராஜினாமா செய்யும் வரை நாங்கள் தொடர்ந்து போராட்டம் நடத்துவோம்“ என்றார்.

இதற்கிடையே தாவணகெரேயில் உள்ள காகினெலே மடத்திற்கு சட்டத்துறை மந்திரி மாதுசாமி, போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை ஆகியோர் நேற்று நேரில் சென்று, மடாதிபதி நிரஞ்சனானந்தபுரி சுவாமியை சந்தித்து பேசினர். அப்போது, குருப சமூகத்தினர் நடத்தி வரும் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று அறிவுறுத்துமாறு அவர்கள் கேட்டுக் கொண்டனர். இந்த பேச்சுவார்த்தையின்போது, மடாதிபதியிடம் மந்திரி மாதுசாமி கண்ணீர்விட்டு அழுதார். தனக்கு எதிராக நடைபெறும் போராட்டத்தை நிறுத்த உதவுங்கள் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

மந்திரிகள் கேட்டுக் கொண்டதை அடுத்து, இந்த விவகாரத்தில் குருப சமூகத்தினர் போராட்டத்தை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று மடாதிபதி நிரஞ்சனானந்தபுரி சுவாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் கூறுகையில், “ஹுலியார் சர்க்கிளுக்கு கனகதாசர் பெயர் சூட்ட மந்திரிகள் மாதுசாமி, பசவராஜ் பொம்மை ஆகியோர் இன்று (அதாவது நேற்று) என்னிடம் உறுதியளித்து உள்ளனர். மாதுசாமி மீது எங்களுக்கு கோபம் இருப்பது உண்மை தான். ஆனால் மந்திரி மாதுசாமி, 3 முறை கண்ணீர்விட்டு அழுது என்னிடம் கேட்டுக் கொண்டார். நமது கோரிக்கை நிறைவேற்றப்பட்டு உள்ளதால், குருப சமூகத்தினர் போராட்டத்தை கைவிட வேண்டும்“ என்றார்.

இதுகுறித்து போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், “நிரஞ்சனானந்தபுரி சுவாமியின் கோரிக்கையை ஏற்று ஹுலியாரில் உள்ள சர்க்கிளுக்கு கனகதாசர் பெயர் சூட்டுவது என்று தீர்மானிக்கப்பட்டு உள்ளது. அங்கு அதற்கான பெயர் பலகை வைக்கப்படும். அதனால் இந்த விவகாரம் இத்துடன் முடிக்கப்பட்டுள்ளது. யாரும் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம்“ என்றார்.

மந்திரி மாதுசாமி கூறும்போது, “நான் ஆணவப்போக்குடன் நடந்துகொள்ளவில்லை. இந்த சம்பவத்தால் நான் மிகுந்த வேதனையை அனுபவித்துள்ளேன். குருப சமூகம் மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. எல்லாவற்றையும் மடாதிபதியிடம் விரிவாக பேசியுள்ளேன். மடங்கள், சமூகங்களை பகைத்துக் கொண்டு அரசியல் செய்ய முடியாது. அதனால் அனைவரும் போராட்டத்தை கைவிட வேண்டும்“ என்றார்.

இடைத்தேர்தல் நெருங்குவதால், இந்த விவகாரம் பா.ஜனதாவுக்கு பெரிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் காரணமாக கே.ஆர்.பேட்டை தொகுதி தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து மாதுசாமி நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story