காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆதரவுடன் உத்தவ் தாக்கரே தலைமையில் ஆட்சி சரத்பவார் அறிவிப்பு


காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆதரவுடன் உத்தவ் தாக்கரே தலைமையில் ஆட்சி சரத்பவார் அறிவிப்பு
x
தினத்தந்தி 23 Nov 2019 5:00 AM IST (Updated: 23 Nov 2019 12:35 AM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆதரவுடன் உத்தவ் தாக்கரே தலைமையில் ஆட்சி அமைக்கப்படும் என்று சரத்பவார் அறிவித்தார்.

மும்பை,

288 உறுப்பினர்களை கொண்ட மராட்டிய சட்டசபைக்கு கடந்த மாதம் 21-ந் தேதி தேர்தல் நடந்தது. 24-ந்தேதி வெளியான தேர்தல் முடிவு பெரும் அரசியல் மாற்றத்துக்கு வித்திட்டது. ஆட்சி அமைக்க 145 இடங்கள் தேவை என்ற நிலையில், பாரதீய ஜனதா, சிவசேனா கூட்டணி 161 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது.

முதல்-மந்திரி பதவியை சுழற்சி முறையில் தலா 2½ ஆண்டுகள் பகிர்ந்து கொள்வது என தேர்தலுக்கு முன்பே பேசி முடிவு செய்யப்பட்டதாக சிவசேனா கூறியதை பாரதீய ஜனதா திட்டவட்டமாக மறுத்தது. இதனால் அக்கட்சிகள் இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து, ஏற்பட்ட அரசியல் குழப்பங்களால், எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாமல் போனதால் கடந்த 12-ந் தேதி மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல் ஆனது.

இந்த நிலையில் பாரதீய ஜனதாவுடன் சுமார் 30 ஆண்டு கால கூட்டணி உறவை முறித்துகொண்ட சிவசேனா தனது தலைமையில் புதிய அரசு அமைப்பதற்காக காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இந்துத்வா கொள்கையை கடைப்பிடித்து வரும் சிவசேனா, மதசார்பற்ற கொள்கை கொண்ட காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் ஆட்சி அமைக்க முற்பட்டது, புதிய அரசியல் திருப்பத்தை ஏற்படுத்தியது.

புதிய ஆட்சியை அமைப்பதற்காக மூன்று கட்சி தலைவர்களும் குறைந்தபட்ச செயல்திட்டம், அதிகாரப்பகிர்வு குறித்து மும்பையிலும், டெல்லியிலும் பல கட்ட பேச்சுவார்த்தையை நடத்தினர். நேற்று முன்தினம் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தை கூட்டிய சோனியா காந்தியும் சிவசேனாவுடன் கைகோர்க்க பச்சைக்கொடி காட்டினார்.

இதன் மூலம் மராட்டியத்தில் ஆட்சி அமைப்பதற்கான 3 கட்சிகளின் புதிய கூட்டணி வடிவம் பெற்றது.

இதையடுத்து, நேற்று காலை சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் மும்பையில் அந்த கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மூன்று கட்சிகளும் சேர்ந்து ஆட்சி அமைப்பதற்கு தங்களது ஒப்புதலை தெரிவித்தனர். மேலும் சிவசேனா தலைமையிலான புதிய அரசில் உத்தவ் தாக்கரே முதல்-மந்திரி ஆக வேண்டும் என வலியுறுத்தினார்கள்.

இதற்கிடையே காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் தேர்தலின் போது, தங்களது கூட்டணியில் இடம் பெற்றிருந்த விவசாயிகள், தொழிலாளர் கட்சி, சமாஜ்வாடி, சுவாபிமானி பக்‌ஷா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆகிய சிறிய கட்சி தலைவர்களை அழைத்து சிவசேனா தலைமையில் ஆட்சி அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தியது. இதில், அவர்கள் பாரதீய ஜனதாவை ஓரம்கட்டி விட்டு மூன்று கட்சிகள் சேர்ந்து புதிய அரசு அமைக்க தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

பின்னர் மாலையில் 3 கட்சி தலைவர்களும் ஆட்சி அமைப்பது குறித்து இறுதி முடிவு எடுக்க தென்மும்பையில் உள்ள நேரு அரங்கத்தில் சந்தித்து பேசினார்கள். இந்த கூட்டத்தில் சிவசேனா சார்பில் உத்தவ் தாக்கரே, சஞ்சய் ராவத், ஏக்நாத் ஷிண்டே, சுபாஷ் தேசாய் ஆகியோர் கலந்து கொண்டனர்.

காங்கிரசை சேர்ந்த மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, கே.சி.வேணுகோபால், அவினாஷ் பாண்டே, மாநில காங்கிரஸ் தலைவர் பாலசாகேப் தோரட், முன்னாள் முதல்-மந்திரி பிரிதிவிராஜ் சவான், மற்றும் தேசியவாத காங்கிரஸ் சார்பில் சரத்பவார், முன்னாள் மத்திய மந்திரி பிரபுல் படேல், முன்னாள் துணை முதல்-மந்திரி அஜித்பவார், மாநில தலைவர் ஜெயந்த் பாட்டீல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த சந்திப்புக்கு பின்னர் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே (முதல்-மந்திரி) தலைமையில் புதிய அரசு அமைக்க மூன்று கட்சிகளிடையே ஒருமித்த கருத்து ஏற்பட்டு உள்ளது. எனவே அரசுக்கு தலைமை வகிப்பது யார்? என்ற பிரச்சினை முடிவுக்கு வந்து விட்டது. இனி மற்ற விஷயங்கள் குறித்து பேசப்படும்” என்றார்.

உத்தவ் தாக்கரே நிருபர்களிடம் கூறுகையில், “பேச்சுவார்த்தை திருப்திகரமாக இருந்தது. பேச்சுவார்த்தையை விரைவில் முடிவுக்கு கொண்டு வந்து மீண்டும் உங்களை (நிருபர்கள்) சந்திப்போம்” என்றார்.

இதன் மூலம் மராட்டியத்தில் உத்தவ் தாக்கரே தலைமையில் புதிய கூட்டணி அரசு அமைய வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளுக்கு துணை முதல்-மந்திரி பதவி வழங்கப்படும் என தெரிகிறது.

பேச்சுவார்த்தையை நிறைவு செய்து, ஆட்சி அமைப்பதற்காக 3 கட்சி தலைவர்களும் விரைவில் கவர்னரிடம் உரிமை கோர உள்ளனர்.

சிவசேனாவிடம் 56, தேசியவாத காங்கிரசிடம் 54, காங்கிரசிடம் 44 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இந்த கட்சிகளின் பலம் 154 ஆக உள்ளதால், ஆட்சி அமைக்க போதிய பெரும்பான்மை இருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story