கடலூர், சிதம்பரத்தில் கொட்டித்தீர்த்த கனமழை, 1,500 வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது - பொதுமக்கள் கடும் அவதி
கடலூர், சிதம்பரத்தில் கனமழை கொட்டித்தீர்த்ததால் 1,500 வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.
கடலூர்,
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருவதையடுத்து தமிழகம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. அந்த வகையில் கடலூர், சிதம்பரம் என மாவட்டம் முழுவதும் நல்ல மழை பெய்தது.
இந்த நிலையில் வெப்பச்சலனம் காரணமாக 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.
அதன்படி கடலூரில் நேற்று அதிகாலையில் இருந்தே மழை தூறிக்கொண்டு இருந்தது. காலை 6 மணிக்கு பிறகு மழையின் வேகம் அதிகரித்து காலை 7.30 மணி வரை சுமார் 1½ மணி நேரம் கன மழையாக பொழிந்தது. பின்னர் மதியம் 1 மணி முதல் மதியம் 3 மணி வரை விட்டு, விட்டு மழை பெய்தது. அவ்வப்போது கனமழையாக பெய்தது. இதனால் சாலை மற்றும் தெருக்களில் வழிந்தோடிய மழைநீர் தாழ்வான பகுதிகளில் குளம்போல தேங்கியது.
மேலும் கடலூர் வண்டிப்பாளையம் சாலை ஸ்டேட் பேங்க் காலனி பகுதியில் உள்ள சிவாநகர், சிவசக்தி நகர், சக்திநகர், கடலூர் முதுநகர் பீமாராவ்நகர், திருப்பாதிரிப்புலியூர் சுப்புராயலுநகர், சரவணாநகர், மஞ்சக்குப்பம் நேருநகர், புதுக்குப்பம் உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள 1,000-க்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்தது. இதனால் வீடுகளை விட்டு வெளியே செல்ல முடியாமல் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.
வடிகால் வசதி இல்லாத தெருக்களில் தேங்கிய மழைநீர் வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் அங்கிருந்தவர்கள் வீடுகளை விட்டு வெளியேறி உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தஞ்சம் அடைந்தனர். மேலும் சிலர் வீட்டில் தேங்கிய மழைநீரை பாத்திரங்கள் மூலம் வெளியேற்றினர்.
கடலூர் லாரன்ஸ் சாலையில் உள்ள சுரங்கப்பாதையில் 3 அடிக்கு மேல் தேங்கிய மழைநீரை கடந்து செல்ல முயன்ற ஆட்டோ தண்ணீரில் சிக்கி, பழுதாகி நின்றது. இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது பற்றி தகவல் அறிந்ததும் போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து, சுரங்கப்பாதையின் இருபுறமும் இரும்பு கம்பிகளால் ஆன தடுப்புகளை வைத்து போக்குவரத்தை நிறுத்தினர். பின்னர் மழைநீரில் சிக்கி பழுதான ஆட்டோவை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரிசெய்தனர்.
அதேபோல் சிதம்பரம், அண்ணாமலைநகரிலும் அதிகாலையில் கனமழை கொட்டித்தீர்த்தது. மேலும் பரங்கிப்பேட்டை, கொத்தவாச்சேரி, புவனகிரி, லால்பேட்டை, காட்டுமன்னார்கோவில், வேப்பூர், தொழுதூர், விருத்தாசலம் என மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. சிதம்பரம் பகுதியில் தாழ்வான இடத்தில் உள்ள 500-க்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்தது. சில வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. மழையின் காரணமாக கடலூரில் நேற்று சில தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.
ஆனால் அரசு பள்ளிகள் வழக்கம் போல் செயல்பட்டன. இதனால் மாணவ-மாணவிகள் குடைபிடித்துக்கொண்டும், மழைக்கோட்டு அணிந்தும் பள்ளிக்கு சென்று வந்ததை பார்க்க முடிந்தது. சாலையோர சிறு வியாபாரிகள், நடைபாதை வியாபாரிகளின் வியாபாரம் பாதிக்கப்பட்டது.
நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அண்ணாமலைநகரில் 81.60 மில்லி மீட்டர், குறைந்தபட்சமாக பண்ருட்டியில் 2 மில்லி மீட்டர் மழை பதிவா னது.
மாவட்டத்தில் சராசரியாக 25.02 மில்லி மீட்டர் மழை பதிவானது.
Related Tags :
Next Story