ஆர்.எஸ்.எஸ். தலைமையகம் அமைந்துள்ள நாக்பூரில் பிறந்தவர்: 2-வது முறையாக முதல்-மந்திரி பதவியில் தேவேந்திர பட்னாவிஸ் ஜொலிப்பாரா?


ஆர்.எஸ்.எஸ். தலைமையகம் அமைந்துள்ள நாக்பூரில் பிறந்தவர்: 2-வது முறையாக முதல்-மந்திரி பதவியில் தேவேந்திர பட்னாவிஸ் ஜொலிப்பாரா?
x
தினத்தந்தி 24 Nov 2019 5:00 AM IST (Updated: 24 Nov 2019 1:51 AM IST)
t-max-icont-min-icon

அரசியல் பூகம்பத்துக்கு மத்தியில் மராட்டிய முதல்-மந்திரியாக பதவி ஏற்ற 49 வயது தேவேந்திர பட்னாவிஸ்ஆர்.எஸ்.எஸ்.யின் தலைமையிடம் அமைந்து உள்ள நாக்பூரில் பிறந்தவர்.அவரது மனைவி பெயர் அம்ருதா. இவர் தனியார் வங்கி நிர்வாகி. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

2014-ம் ஆண்டு ஆட்சி அமைக்க போதிய பெரும்பான்மை இல்லாத போதும் தேவேந்திர பட்னாவிஸ், மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த பிரமாண்ட விழாவில் பிரதமர் மோடி முன்னிலையில் முதல் தடவையாக முதல்-மந்திரியாக பதவி ஏற்றார்.

பின்னர் சிவசேனா ஆதரவுடன் தனது ஆட்சி காலத்தை நிறைவு செய்தார். இந்தநிலையில் நேற்று அவர் ராஜ்பவனில் ரகசியமாக நடந்த விழாவில் 2-வது தடவையாக முதல்-மந்தியாக பதவி ஏற்றுக்கொண்டார்.

தேவேந்திர பட்னாவிஸ் குடும்பத்திற்கும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது. இதனால் இளம்வயதிலேயே தேவேந்திர பட்னாவிஸ் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டார். சட்டப்படிப்பும், முதுகலை தொழில் மேலாண்மையும் படித்த பட்னாவிஸ் 1990-களில் அரசியலில் நுழைந்தார். மேலும் 1992-ல் நாக்பூர் மாநகராட்சி கவுன்சிலர் ஆனார். இதையடுத்து இளம்வயதில் நாக்பூர் மேயரானார். இந்தியாவின் 2-வது இளம்மேயர் என்ற பெருமையை பட்னாவிஸ் பெற்றார்.

அதன்பிறகு 1999-ம் ஆண்டு முதல் நாக்பூர் தென்மேற்கு சட்டசபை தொகுதியில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக தேர்வானார். பட்னாவிஸ் பா.ஜனதா மட்டுமின்றி கூட்டணி கட்சி தலைவர்களுடனும் இணக்கமான உறவை கடைப்பிடித்தாா்.

2014-ம் ஆண்டு தேர்தலை தொடர்ந்து, கட்சியில் பல மூத்த தலைவர்கள் இருந்த போதும் மராட்டிய முதல்-மந்திரியாக தேவேந்திர பட்னாவிசை பா.ஜனதா மேலிடம் தேர்வு செய்தது.

அதிகமாக ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தாத தேவேந்திர பட்னாவிஸ் எதையும் பொறுமையாக கேட்டு, அதிரடியான நடவடிக்கைகளை எடுக்க கூடியவர் என அரசியல் நோக்கர் கூறுகின்றனர். கூட்டணி போதிய இடங்களில் வெற்றி பெற்று இருந்த போதும் சிவசேனா கைவிட்டதால் தேவேந்திர பட்னாவிஸ் அஜித்பவார் ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் இணைந்து முதல்-மந்திரியாக பதவி ஏற்று உள்ளார்.

எந்த முடிவையும் பலமுறை யோசித்து எடுக்கும் பட்னாவிஸ் சட்டசபையில் நடைபெற உள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபிப்பாரா?, 2-வது தடவையாக பதவி ஏற்ற அவர் தொடர்ந்து முதல்-மந்திரியாக ஜொலிப்பாரா? என்பது தான் அடுத்த எதிர்பார்ப்பாக உள்ளது.

Next Story