நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மழை: பாபநாசம் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்வு மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு


நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மழை: பாபநாசம் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்வு மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு
x
தினத்தந்தி 24 Nov 2019 3:45 AM IST (Updated: 24 Nov 2019 2:50 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பரவலாக பெய்த மழையால் பாபநாசம் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்ந்து உள்ளது. மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

நெல்லை,

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, வடகிழக்கு பருவமழை காரணமாக நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு பரவலாக மழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி, நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் மாவட்டங்களில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

நெல்லை மாவட்டத்தில் அதிகபட்சமாக பாளையங்கோட்டையில் 46.40 மில்லி மீட்டர் மழை பதிவானது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது. நெல்லை சி.என். கிராமம் பகுதியில் ஒரு மின்கம்பம் சாய்ந்தது. இந்த மழை காரணமாக நெல்லை தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.

பாபநாசம் அணை நீர்மட்டம் நேற்று முன்தினம் 134.90 அடியாக இருந்தது. நேற்று காலை நிலவரப்படி 137.05 அடியாக உயர்ந்துள்ளது. அதாவது, ஒரே நாளில் 2.15 அடி உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு 2,420 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 578 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 147.80 அடியில் இருந்து 149.87 அடியாக உயர்ந்துள்ளது.

மணிமுத்தாறு அணை நீர்மட்டம் நேற்று முன்தினம் 70.40 அடியாக இருந்தது. நேற்று காலை நிலவரப்படி 72.60 அடியாக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 2.20 அடி உயர்ந்து உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,745 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 35 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு இதே நாளில் மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 99.90 அடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

மணிமுத்தாறு அணைக்கு மேல் உள்ள மாஞ்சோலை, குதிரைவெட்டி, காக்காச்சி, நாலுமுக்கு உள்ளிட்ட தேயிலை தோட்டப்பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. ஏற்கனவே மணிமுத்தாறு அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் அங்கு யாரும் செல்லவில்லை.

குற்றாலம் அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகளும், அய்யப்ப பக்தர்களும் அந்த அருவிகளில் நேற்று உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி பதிவான மழை அளவு (மி.மீ.) வருமாறு:-

பாபநாசம்- 42, சேர்வலாறு- 44, மணிமுத்தாறு- 34.8, கடனா- 10, ராமநதி- 27, கருப்பாநதி- 10, குண்டாறு- 5, நம்பியாறு- 10, கொடுமுடியாறு- 20, அடவிநயினார்- 4, அம்பை- 19.40, ஆய்க்குடி- 25, சேரன்மாதேவி- 39.40, நாங்குநேரி- 21.30, பாளையங்கோட்டை- 46.40, ராதாபுரம்- 5, சங்கரன்கோவில்- 5, செங்கோட்டை- 14, சிவகிரி- 5, தென்காசி- 32.40, நெல்லை- 27.

Next Story