தஞ்சையில் உரிமையியல் நீதிபதி பதவிக்கு போட்டி தேர்வு 367 பேர் எழுதினர்


தஞ்சையில் உரிமையியல் நீதிபதி பதவிக்கு போட்டி தேர்வு 367 பேர் எழுதினர்
x
தினத்தந்தி 25 Nov 2019 4:15 AM IST (Updated: 25 Nov 2019 1:24 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சையில் உரிமையியல் நீதிபதி பதவிக்கு நடந்த போட்டி தேர்வை 367 பேர் எழுதினர்.

தஞ்சாவூர்,

தஞ்சை பாரத் அறிவியல் மற்றும் நிர்வாகவியல் கல்லூரியில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் உரிமையியல் நீதிபதி பதவிக்கான போட்டி தேர்வு நேற்று நடந்தது. இந்த தேர்வு எழுத 400 பேருக்கு அனுமதி கடிதம் அனுப்பப்பட்டு இருந்தது. ஆனால் 367 பேர் தான் தேர்வு எழுதினர். பல்வேறு காரணங்களால் 33 பேர் தேர்வு எழுத வரவில்லை.

தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கியது. தாமதமாக வந்தவர்கள் 10.30 மணி வரை தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். அதன்பிறகு வந்தவர்கள் யாரையும் தேர்வு எழுத அனுமதிக்கவில்லை. தேர்வு எழுத வந்தவர்களை போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்த பின்னரே உள்ளே அனுமதித்தனர்.

மின்னணு சாதனங்கள்

தேர்வர்கள் செல்போன், கால்குலேட்டர் உள்ளிட்ட நவீன மின்னணு சாதனங்களை கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை. செல்போன் கொண்டு வந்தவர்களிடம் இருந்து செல்போன் பெறப்பட்டு, அதற்கான டோக்கன் வழங்கப்பட்டது. தேர்வு எழுதிவிட்டு வந்தவுடன் டோக்கனை காண்பித்து செல்போனை பெற்று சென்றனர்.

தேர்வு மையத்திற்கு வந்த சென்னை ஐகோர்ட்டு நீதிபதி நிர்மல்குமார் ஒவ்வொரு அறையாக சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது தேர்வு கண்காணிப்பில் ஈடுபடும் அலுவலர்கள் கவனமாக பணியாற்ற வேண்டும். 100 சதவீதம் தவறு நடைபெறாமல் கண்காணிக்க வேண்டும். தவறு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டது.

ஆய்வின்போது கலெக்டர் கோவிந்தராவ், மாவட்ட முதன்மை நீதிபதி சிவஞானம், கூடுதல் மாவட்ட நீதிபதி கருணாநிதி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன், மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், வருவாய் கோட்டாட்சியர் வேலுமணி மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

போலீஸ் பாதுகாப்பு

உரிமையியல் நீதிபதி பதவிக்கான போட்டி தேர்வை தமிழ் எழுத, பேச தெரியாத வெளிமாநிலத்தை சேர்ந்த வக்கீல்களும் எழுதலாம் என தமிழகஅரசு அறிவித்து இருந்தது. இதற்கு பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். வெளிமாநில வக்கீல்கள் தேர்வு எழுத வரும்போது அவர்களை யாராவது தடுத்து போராட்டத்தில் ஈடுபடலாம் என கருதி பாரத் கல்லூரியை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. தேர்வு எழுத வந்தவர்களை தவிர வேறு யாரையும் மையத்திற்குள் செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை. கல்லூரி முன்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ்வரன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.



Next Story