தஞ்சையில் ரூ.80 கோடியில் புதிய மேம்பாலம் அதிகாரிகள் இடத்தை பார்வையிட்டனர்


தஞ்சையில் ரூ.80 கோடியில் புதிய மேம்பாலம் அதிகாரிகள் இடத்தை பார்வையிட்டனர்
x
தினத்தந்தி 25 Nov 2019 4:15 AM IST (Updated: 25 Nov 2019 1:27 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சையில் ரூ.80 கோடியில் புதிய பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான இடத்தை அதிகாரிகள் பார்வையிட்டனர்.

தஞ்சாவூர்,

தஞ்சாவூர் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள தஞ்சை மேம்பாலமானது தஞ்சை பெரியகோவில், மருத்துவக்கல்லூரி, ராமநாதன்ரவுண்டானா, ராசாமிராசுதார்மருத்துவமனை, பழைய பஸ்நிலையம், ரெயில்நிலையம், போன்ற இடங்களை இணைக்கும் முக்கியமான ரெயில்வே மேம்பாலம் ஆகும். இதனால் இந்த பாலத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல் படி அமைக்கப்பட்ட மத்தியஅரசு குழுவின் கணக்கெடுப்பின்படியும், காவல்துறையின் விபத்துக்கள் பதிவேடுகளின் படியும் இந்த மேம்பாலத்தில் உயிர் இழப்புகளை ஏற்படுத்தும் சாலை விபத்துகள் அதிகம் நிகழும் இடமாக (பிளாக்ஸ்பாட்) கண்டறியப்பட்டுள்ளது.

ரூ.80 கோடியில்...

இதனால் விபத்துகளை குறைத்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் வகையில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு அலகின் தலைமை பொறியாளர் சாந்தி தஞ்சை மேம்பாலத்தில் அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார். இதைத்தொடர்ந்து போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் தஞ்சை கோர்ட்டு சாலையையும், மருத்துவக்கல்லூரி சாலையையும் இணைக்கும் வகையில் ரூ.80 கோடி செலவில் புதிய மேம்பாலம் கட்ட முடிவு எடுக்கப்பட்டது.

12,000 மரக்கன்றுகள்

இதற்கான முன்மொழிவுகளை உடனடியாக அரசுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் தற்காலிகமாக தஞ்சை மேம்பாலத்தில் நடைபெறும் விபத்துகளை தவிர்க்க நடுத்திட்டுகள் அமைக்க அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். ஆய்வின் போது திருச்சி கட்டுமானம் மற்றும் பராமரிப்பு அலகின் கண்காணிப்பாளர் பழனி, தஞ்சாவூர் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு அலகின் கோட்டப்பொறியாளர் பாலசுப்பிரமணியன், உதவிகோட்டப்பொறியாளர் ரேணுகோபால், உதவி பொறியாளர்கள் இளவரசன், மாரிமுத்து உட்பட பலர் உடன் இருந்தனர்.

முன்னதாக வேர் மண்டல நீர் பாசன நடவு முறைப்படி தஞ்சை கோட்டத்தில் 12,000 மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க திட்டமிடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக வல்லம்-ஒரத்தநாடு சாலையில் நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் சாந்தி மற்றும் அதிகாரிகள் மரக்கன்றை நட்டு வைத்தனர்.

Next Story