மராட்டிய கவர்னரின் தவறான போக்கை காங்கிரஸ் கட்சி கண்டிக்கிறது கே.எஸ்.அழகிரி பேட்டி


மராட்டிய கவர்னரின் தவறான போக்கை காங்கிரஸ் கட்சி கண்டிக்கிறது கே.எஸ்.அழகிரி பேட்டி
x
தினத்தந்தி 24 Nov 2019 11:15 PM GMT (Updated: 24 Nov 2019 9:32 PM GMT)

மராட்டிய கவர்னரின் தவறான போக்கை காங்கிரஸ் கட்சி கண்டிக்கிறது என்று ஈரோட்டில் கே.எஸ்.அழகிரி கூறினார்.

ஈரோடு,

பாரதீய ஜனதா கட்சி கொள்ளை புறமாக ஒரு ஆட்சியை கைப்பற்றி இருக்கிறது. ஆனால் அவர்களுடைய நடவடிக்கை வெற்றி ெபறாது. இந்திய மக்களிடம் அவர்களுடைய முகத்திரை கிழிக்கப்பட்டு இருக்கிறது. தர்மத்துக்கு புறம்பாக அவர்கள் அந்த காரியத்தை செய்திருக்கிறார்கள். ஒரு கட்சியை உடைத்தது மட்டுமல்லாமல், ஒரு குடும்பத்துக்குள் நுழைந்து குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

பதவி ஆசை அவர்களை அவ்வாறு செய்ய வைத்திருக்கிறது. சிவசேனா கட்சி, கவர்னரிடம் 3 நாட்கள் அவகாசம் கேட்டனர். அதற்கு கவர்னர் மறுத்துவிட்டார். சரத்பவாருக்கு 24 மணி நேரம் கொடுத்து விட்டு, பின்னர் 12 மணி நேரத்தில் அதை கவர்னர் திரும்ப பெற்றுக்கொண்டார்.

குடியரசு தலைவர் ஆட்சி

ஆனால் கடந்த 15 நாட்களாக பாரதீய ஜனதா கட்சிக்கு அவகாசம் கொடுத்து, அதிகாலை 5 மணிக்கு குடியரசு தலைவர் ஆட்சியை திரும்பப்பெற்று, காலை 8 மணிக்கெல்லாம் ஒரு புதிய முதல் -அமைச்சர் பதவி ஏற்று இருக்கிறார். இதனால் ஜனநாயகத்தின் மீது மக்களுக்கு கேள்வி எழுந்துள்ளது. தவறான ஒரு காரியத்தை கவர்னர் உதவியோடு பாரதீய ஜனதா கட்சி செய்திருக்கிறது.

சரத்பவார் இன்றைக்கு நீதிக்காக போராடி வருகிறார். அவருடைய கட்சி உடைக்கப்பட்டு இருக்கிறது. எல்லாமே அதிகாரத்திற்காக. தங்களிடையே இருக்கிற அதிகார பலத்தை வைத்துக்கொண்டு ஜனநாயகத்தை சிதைத்து இருக்கிறார்கள். இதை இந்திய மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மராட்டிய கவர்னரின் இந்த தவறான போக்கை தமிழ்நாடு காங்கிரஸ் மிகவும் வன்மையாக கண்டிக்கிறது.

மறைமுக தேர்தல்

கவர்னர் தனக்கு எல்லா அதிகாரங்களும் இருப்பதாக நினைக்கக்கூடாது. கவர்னரின் அதிகாரங்கள் வரையறுக்கப்பட்டவை. இது கூட்டாட்சி தத்துவம் உள்ள நாடு. கேள்விகளுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டவர் அவர். எனவே தவறான செயல்களுக்கு அவர் வருத்தம் தெரிவிக்க வேண்டும். மன்னிப்பு கேட்க வேண்டும். தன்னுடைய நிலையை அவர் திரும்ப பெற்றுக்கொள்ள வேண்டும்.

உள்ளாட்சி தேர்தலில் எங்கள் கூட்டணி மகத்தான வெற்றி பெறும். நாங்கள் வெற்றி பெற்று விடுவோம் என்ற காரணத்தால் தான் இன்றைக்கு மறைமுக தேர்தலை அ.தி.மு.க.வினர் அறிவித்து இருக்கிறார்கள்.

மக்கள் சக்தி

4 மாதங்களுக்கு முன்பு சட்டமன்றத்தில் முதல் -அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணியும், நேரடி தேர்தல் தான் சிறப்பானது என்று சொன்னார்கள். ஆனால் 4 மாதங்களில் அரசாங்கம் தன்னுடைய நிலையை மாற்றிக்கொண்டு இருக்கிறது.

இதற்கு காரணம் கடந்த பாராளுமன்ற தேர்தலில் எங்கள் அணி வெற்றி பெற்றது போல், இந்த உள்ளாட்சி தேர்தலிலும் வெற்றி பெறுவார்கள் என்கிற காரணத்தினால் தான் அவர்கள் மறைமுக தேர்தலை அறிவித்து இருக்கிறார்கள். பணம் மற்றும் படை பலத்தை வைத்து, வெற்றி பெற்றவர்களை தூக்கி அதன் மூலம் தாங்கள் வெற்றி அடையலாம் என்று கருதுகிறார்கள். அதுவும் நடக்காது. மக்கள் சக்தியை திரட்டி நாங்கள் அதை சிதறடிப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story