‘‘சரத்பவார் என் தலைவர்’’ நான் தேசியவாத காங்கிரசில்தான் இருக்கிறேன் அஜித்பவார் சொல்கிறார்


‘‘சரத்பவார் என் தலைவர்’’ நான் தேசியவாத காங்கிரசில்தான் இருக்கிறேன் அஜித்பவார் சொல்கிறார்
x
தினத்தந்தி 25 Nov 2019 4:58 AM IST (Updated: 25 Nov 2019 4:58 AM IST)
t-max-icont-min-icon

சரத்பவார் என் தலைவர், நான் இன்னும் தேசியவாத காங்கிரசில்தான் இருக்கிறேன் என்று அஜித்பவார் கூறியுள்ளார்.

மும்பை,

மராட்டியத்தில் திடீர் திருப்பமாக, தேவேந்திர பட்னாவிஸ் முதல்-மந்திரி ஆனார். தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அஜித்பவார் துணை முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். ஆனால், இது அஜித்பவாரின் தனிப்பட்ட முடிவு என்று தேசியவாத காங்கிரஸ் மறுப்பு தெரிவித்துள்ளது.

கட்சியின் சட்டசபை குழு தலைவர் பொறுப்பில் இருந்து அஜித்பவாரை தேசியவாத காங்கிரஸ் கட்சி நீக்கி உள்ளது. இந்நிலையில், மராட்டிய மாநில துணை முதல்-மந்திரி அஜித்பவார் நேற்று தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் பரபரப்பு கருத்துகளை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

நான் தேசியவாத காங்கிரசில்தான் இருக்கிறேன். எப்போதும் தேசியவாத காங்கிரசில்தான் இருப்பேன். சரத்பவார்தான் நமது தலைவர்.

நமது பா.ஜனதா-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி, அடுத்த 5 ஆண்டுகளுக்கு மராட்டிய மாநிலத்தில் நிலையான ஆட்சியை அளிக்கும்.

இதில் கவலைப்பட எதுவும் இல்லை. எல்லாம் நன்றாகவே நடக்கிறது. இருந்தாலும், சற்று பொறுமை தேவைப்படுகிறது. எல்லோருடைய ஆதரவுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அஜித்பவார் கூறியுள்ளார்.

இதற்கிடையே தேசியவாத காங்கிரஸ் மாநில தலைவர் ஜெயந்த் பாட்டீல், சட்டசபை குழு தலைவராக தற்காலிகமாக நியமிக்கப்பட்டார். மேலும் அஜித் பவாரிடம் இருந்த சட்டசபை கொறடா பதவியும் பறிக்கப்பட்டது. நேற்று முன்தினம் நடந்த கட்சி எம்.எல்.ஏ.க்களின் கூட்டத்தில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்த தகவலை கவர்னர் பகத்சிங் கோ‌‌ஷ்யாரியிடம் நேற்று தேசியவாத காங்கிரஸ் தெரிவித்தது. இது தொடர்பான கடிதத்துடன் ஜெயந்த் பாட்டீல் கவர்னர் மாளிகைக்கு சென்றார். அங்கு கவர்னர் இல்லாததால், அங்குள்ள அதிகாரிகளிடம் இந்த கடிதத்தை அவர் ஒப்படைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயந்த் பாட்டீல், அஜித்பவாரை சமாதானப்படுத்தி, பா.ஜனதாவுக்கு ஆதரவு அளிக்கும் முடிவை மறுபரிசீலனை செய்வதற்கான முயற்சிகள் நடந்து வருவதாக தெரிவித்தார். பின்னர் அவர் அஜித்பவாரை சந்திப்பதற்காக அவரது வீட்டுக்கு புறப்பட்டு சென்றார்.

Next Story