பொதுப்பணித்துறை நிலத்தை ஆக்கிரமித்து கட்டிய கோவில் இடித்து அகற்றம் ராஜாக்கமங்கலம் அருகே பரபரப்பு


பொதுப்பணித்துறை நிலத்தை ஆக்கிரமித்து கட்டிய கோவில் இடித்து அகற்றம் ராஜாக்கமங்கலம் அருகே பரபரப்பு
x
தினத்தந்தி 26 Nov 2019 4:30 AM IST (Updated: 25 Nov 2019 8:38 PM IST)
t-max-icont-min-icon

ராஜாக்கமங்கலம் அருகே பொதுப்பணித்துறை நிலத்தை ஆக்கிரமித்து கட்டிய கோவில் இடித்து அகற்றப்பட்டது.

ராஜாக்கமங்கலம்,

ராஜாக்கமங்கலம் அருகே வடக்கு சூரங்குடி பகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான சம்பக்குளம் உள்ளது. இந்த குளத்தின் கரையில் மறுகால்தலைவிளையை சேர்ந்்த ஒருவர் கோவில் கட்டி வழிபாடு நடத்தி வந்தார்.

இந்தநிலையில் இந்த கோவில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து கட்டி இருப்பதாகவும், இதை அகற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தனர்.

அதன்பேரில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன் கோவிலை இடிப்பதற்காக பொக்லைன் எந்திரத்துடன் வந்தனர். அப்போது, தாங்களே இடித்து அகற்றி கொள்கிறோம் என கோவில் நிர்வாகத்தினர் கூறினர். அதைத்தொடர்ந்து அதிகாரிகள் கோவிலை இடிக்காமல் சென்றனர். ஆனால், கோவில் நிர்வாகத்தினர் கூறியபடி கோவிலை இடிக்கவில்லை.

இடித்து அகற்றம்

இந்த நிலையில் மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே உத்தரவின் பேரில் அகஸ்தீஸ்வரம் தாசில்தார் அப்துல் மன்னா, நீண்டகரை கிராம அலுவலர் ராமலெட்சுமி, பொதுப்பணித்துறை அதிகாரிகள் ரமேஷ் ராஜன், பிரீடா, ஜெனிபா ஆகியோர் நேற்று காலை சம்பவ இடத்துக்கு வந்தனர். பின்னர், பொக்லைன் எந்திரம் உதவியுடன் கோவிலை இடித்து அகற்றும் பணி நடைபெற்றது.

மேலும் அங்கு அசம்பாவித சம்பவம் ஏற்படாமல் இருக்க ராஜாக்கமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனா தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story