லோயர்கேம்ப்-குமுளி மலைப்பாதையில் வீசப்படும், பிளாஸ்டிக் கழிவுகளால் வனவிலங்குகள் பாதிப்பு


லோயர்கேம்ப்-குமுளி மலைப்பாதையில் வீசப்படும், பிளாஸ்டிக் கழிவுகளால் வனவிலங்குகள் பாதிப்பு
x
தினத்தந்தி 26 Nov 2019 3:45 AM IST (Updated: 25 Nov 2019 10:25 PM IST)
t-max-icont-min-icon

லோயர்கேம்ப்-குமுளி மலைப்பாதையில் வீசப்படும் பிளாஸ்டிக் கழிவுகளால் வனவிலங்குகள் பாதிக்கப்படுகின்றன.

கூடலூர், 

கூடலூரின் 21-வது வார்டு பகுதியான லோயர்கேம்ப்பில் இருந்து கேரள மாநிலம் குமுளி வரை சுமார் 6 கிலோமீட்டர் தூரம் மலைப்பாதை அமைந்துள்ளது. இயற்கை வளம் நிறைந்த இந்த மலைப்பகுதியில் மான்கள், குரங்குகள், காட்டுப்பன்றிகள் அதிகளவில் உள்ளன. குறிப்பாக சாலையோரங்களில் ஏராளமான குரங்குகள் சுற்றித்திரிகின்றன.

இந்த மலைப்பாதை வழியாக அய்யப்ப பக்தர்கள் ஏராளமானவர்கள் சபரிமலைக்கு சென்று வருகிறார்கள். மேலும் கேரள மாநிலத்தின் முக்கிய சுற்றுலா தலமான தேக்கடிக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இந்த மலைப்பாதை வழியாக சென்று வருகின்றனர். இவ்வாறு செல்லும் அய்யப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் சாலையோரம் வாகனங்களை நிறுத்தி இயற்கை எழில் கொஞ்சும் வனப்பகுதிகளை ரசித்து செல்கின்றனர். அப்போது அவர்கள் கொண்டுவரும் திண்பண்டங்களை சாப்பிட்டுவிட்டு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் என பிளாஸ்டிக் கழிவுகளை வனப்பகுதியில் வீசி செல்கின்றனர்.

இதனால் குமுளி செல்லும் மலைப்பாதையில் பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்து கிடக்கின்றன. பிளாஸ்டிக் பைகளில் இருக்கும் உணவுப் பண்டங்களை வன விலங்குகள் எடுத்து உண்ணும்போது சில சமயங்களில் பிளாஸ்டிக் பைகளையும் சேர்த்து உண்ணுகின்றன. இதனால் வனவிலங்குகள் பாதிப்படைந்து இறக்க நேரிடுகின்றன. அதையொட்டி வனப்பகுதியில் குரங்குகள், காட்டுப்பன்றிகள், மான்கள் உள்ளிட்ட வன விலங்குகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. மேலும் சுற்றுப்புறச்சூழலும் பாதிக்கப்படுகிறது. எனவே லேயர்கேம்ப்-குமுளி மலைப்பாதையில் அய்யப்ப பக்தர்கள், சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக் கழிவுகளை வீசி செல்வதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Next Story