போலி சாவி தயாரித்து கைவரிசை: உறவினர் வீடுகளில் நகை-பணம் திருடிய காதல் ஜோடி கைது - கண்காணிப்பு கேமரா காட்சியால் சிக்கினர்


போலி சாவி தயாரித்து கைவரிசை: உறவினர் வீடுகளில் நகை-பணம் திருடிய காதல் ஜோடி கைது - கண்காணிப்பு கேமரா காட்சியால் சிக்கினர்
x
தினத்தந்தி 26 Nov 2019 12:15 AM GMT (Updated: 25 Nov 2019 5:42 PM GMT)

போலி சாவி தயாரித்து உறவினர் வீடுகளில் நகை, பணம் திருடிய காதல் ஜோடியை போலீசார் கைது செய்தனர். கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியால் இருவரும் சிக்கினர்.

பூந்தமல்லி,

சென்னை போரூரை அடுத்த காரப்பாக்கம், செங்குட்டுவன் தெருவைச் சேர்ந்தவர் ஜெகதீஷ் பாண்டியன் (வயது 36). கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு வழக்கமாக வைக்கும் இடத்தில் சாவியை வைத்துவிட்டு வேலைக்கு சென்றுவிட்டார். இரவு வீட்டுக்கு வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த 5 பவுன் நகை மற்றும் பணம் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீடு பூட்டி இருந்த நிலையில் வீடு புகுந்து நகை, பணம் திருட்டு போன சம்பவம் குறித்து வளசரவாக்கம் போலீசில் புகார் அளித்தார்.

இதையடுத்து வளசரவாக்கம் உதவி கமிஷனர் மகிமைவீரன், இன்ஸ்பெக்டர் அமுதா ஆகியோர் தலைமையிலான போலீசார், அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அதில் ஒரு ஆணும், பெண்ணும் வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்றுவிட்டு, சிறிது நேரம் கழித்து வெளியே வருவது போன்ற காட்சிகள் பதிவாகி இருந்தது. இதுகுறித்து ஜெகதீஸ் பாண்டியனிடம் கேட்டபோது, கண்காணிப்பு கேமராவில் பதிவான வாலிபர், உறவினரின் மகன் என தெரிவித்தார்.

இதையடுத்து வளசரவாக்கம் போலீசார், கோயம்பேட்டை சேர்ந்த கார்த்திக்(24) மற்றும் அவருடைய காதலியான மதுரவாயலை சேர்ந்த நித்யா(24) ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. இதுபற்றி போலீசார் கூறியதாவது:-

கார்த்திக், நித்யா இருவரும் என்ஜினீயரிங் கல்லூரியில் படிக்கும்போதே காதலித்து வந்தனர். கல்லூரி படிப்பை முடித்துவிட்டு கார்த்திக், சொந்தமாக தொழில் நடத்தி வந்தார். நித்யா, சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கார்த்திக்கிற்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. தனது பாட்டியின் கட்டுப்பாட்டில் வளர்ந்து வந்த நித்யாவுக்கு போதிய வருமானம் இல்லை.

எனவே தொழில் நஷ்டத்தை ஈடு செய்யவும், ஆடம்பரமாக வாழவும் என்ன செய்வது? என்று காதல் ஜோடி யோசித்தபோதுதான், தங்களது உறவினர்கள் வீடுகளில் நூதன முறையில் கொள்ளையடிக்க முடிவு செய்தனர்.

அதன்படி வீட்டின் பூட்டை உடைக்காமலும், போலீசாரிடம் சிக்காமலும் கொள்ளை அடிக்க திட்டமிட்டனர். அதன்படி இருவரும் நலம் விசாரிக்க செல்வது போலும், வேலை விஷயமாக பேசுவது போலவும் தங்களின் உறவினர்கள் வீடுகளுக்கு சென்று, அவர்களின் வீட்டில் உள்ள அறைகளை கண்காணிப்பார்கள்.

அவர்கள் வெளியே செல்லும்போது சாவியை எந்த இடத்தில் வைத்துவிட்டு செல்கின்றனர் என்பதை அறிந்து, அந்த சாவியை போல் போலியான சாவியையும் தயாரித்து வைத்து கொள்வார்கள். பின்னர் வீட்டின் உரிமையாளர்கள் வெளியே செல்லும் நேரம் பார்த்து, போலி சாவி மூலம் அவர்களின் வீட்டின் கதவை திறந்து திருடிச்சென்று விடுவார்கள். இவர்கள் அடிக்கடி அந்த உறவினர்கள் வீடுகளுக்கு வந்து செல்வதால் அக்கம் பக்கத்தினர் யாருக்கும் இருவர் மீதும் சந்தேகம் ஏற்படவில்லை.

ஜெகதீஷ் பாண்டியன் வீட்டில் அதிக நகை இருக்கும் என நம்பி, அதேபோல் போலி சாவி தயாரித்து வீட்டின் கதவை திறந்து உள்ளே புகுந்தனர். ஆனால் 5 பவுன் மதிப்புடைய குழந்தைகளின் நகைகள் மட்டும் இருந்ததால் அதனை திருடிச்சென்று உள்ளனர். இதுபோல் பல்வேறு இடங்களில் இருவரும் தங்களது உறவினர் வீடுகளில் கைவரிசை காட்டி உள்ளனர். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

உறவினர்களின் வீடுகளிலேயே கள்ளச்சாவி தயாரித்து நகை, பணம் கொள்ளையடித்த சாப்ட்வேர் என்ஜினீயர்களான காதல் ஜோடி கைதான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story