ஒரு சில பார்களுக்கு ஏலம் நடைபெறாததால் பெண் அதிகாரியை முற்றுகையிட்ட பார் உரிமையாளர்கள்


ஒரு சில பார்களுக்கு ஏலம் நடைபெறாததால் பெண் அதிகாரியை முற்றுகையிட்ட பார் உரிமையாளர்கள்
x
தினத்தந்தி 25 Nov 2019 10:15 PM GMT (Updated: 25 Nov 2019 9:54 PM GMT)

பெரும்பாலான பார்களுக்கு ஏலம் நடைபெற்ற நிலையில் ஒரு சில பார்களுக்கு ஏலம் நடை பெறாததால் பெண் அதிகாரியை பார் உரிமையாளர்க்ள முற்றுகையிட்டனர்.

அனுப்பர்பாளையம்,

திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 235 டாஸ்மாக் பார்கள் உள்ளன. 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை அந்த பார்களுக்கு மாவட்ட டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் ஏலம் விடப்படுகிறது. இந்த நிலையில் இந்த ஆண்டிற்கான ஏலம் கடந்த செப்டம்பர் மாதம் 19-ந்தேதி நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அன்று நடைபெறாமல் கடந்த 11-ந்தேதிக்கு ஏலம் ஒத்தி வைக்கப்பட்டது. ஆனால் அன்றும் ஏலம் நடைபெறாமல் 22-ந்தேதிக்கு மீண்டும் ஏலம் ஒத்தி வைக்கப்பட்டது.

22-ந் தேதியும் ஏலத்திற்கான விண்ணப்பங்கள் வழங்கப்படாததால் அன்றும் ஏலம் விடப்படவில்லை. இதனால் பார் உரிமையாளர்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின்னர் நேற்று மதியம் 3 மணிக்கு ஏலம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் ஏலத்திற்கான விண்ணப்பங்கள் நேற்று காலை 10 மணி முதல் வழங்கப்பட்டு மதியம் 2 மணிக்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டன. பின்னர் 3 மணி முதல் ஏலம் தாலுகா வாரியாக அறிவிக்கப்பட்டது. இரவு 7 மணி வரை 195 பார்களுக்கு ஏலம் முடிவடைந்தது.

கோவை மாவட்ட மேலாளர் தாஜூதீன், பொள்ளாச்சி மேலாளர் தேவிகாராணி, திருப்பூர் மாவட்ட மேலாளர் லூர்துராஜ் உள்ளிட்ட அதிகாரிகளும், மாவட்டம் முழுவதும் இருந்து கட்சி நிர்வாகிகள், பார் உரிமையாளர்களும் ஏலத்தில் கலந்து கொண்டனர். ஏலத்தையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

மடத்துக்குளம் மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த சில பார்களுக்கு ஏலம் நடைபெறாததால் நீண்ட நேரம் காத்திருந்த பார் உரிமையாளர்கள் கடும் அதிருப்திக்குள்ளாகினார்கள். மேலும் அலுவலகத்தில் இருந்து வெளியேறிய மண்டல முதுநிலை மேலாளர் பரமேஸ்வரியை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story