பாம்பனில் வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்தது - ராமேசுவரம் பகுதியில் பலத்த மழை
ராமேசுவரம் பகுதியில் பலத்த மழை பாம்பனில் ஏராளமான வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்தது.
ராமேசுவரம்,
தமிழகத்தில் பருவமழை சீசன் தொடங்கியதிலிருந்தே பரவலாக மழை பெய்து வருகிறது. அதுபோல் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் சில
மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில் ராமேசுவரத்தில் தொடர்ந்து 3-வது நாளாக நேற்றும் பலத்த மழை பெய்தது. காலை 1 மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது.அதன் பின்னர் மாலை வரை லேசான சாரல் மழை பெய்து கொண்டிருந்தது.
பலத்த மழையால் ராமதீர்த்தம் பகுதியில் உள்ள எல்.ஐ.சி.அலுவலகம் முன்பும் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது. அது போல் சீதா தீர்த்த சாலை, தனுஷ்கோடி சாலை உள்ளிட்ட பல இடங்களிலும் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. இதே போல் பாம்பன் பகுதியிலும் நேற்று காலை 1½ மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்ததுடன் பகல் முழுவதும் சாரல் மழை பெய்து கொண்டிருந்தது.
பாம்பனில் பெய்த பலத்த மழையால் புயல் காப்பகம் அருகே உள்ள பொட்டையம்மாள்குளம் பகுதியில் உள்ள 40-க்கும் மேற்பட்ட வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்தது. அதில் சில வீடுகளின் உள்ளே மழைநீர் புகுந்ததால் வீடுகளில் உள்ளவர்கள் வீட்டை விட்டு வெளியேறி தற்காலிகமாக வேறு ஒரு வீடை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்து வருகின்றனர்.
மழை வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை தாசில்தார் அப்துல்ஜபார், துணை வட்டார வளர்ச்சி அதிகாரி செந்தில்குமார், ஊராட்சி உதவியாளர் விசுவநாதன் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். தொடர்ந்து வீடுகளை சூழ்ந்திருந்த மழைநீரை வெளியேற்ற பள்ளம் தோண்டப்பட்டு மழை நீரை வெளியேற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதேபோல தங்கச்சிமடத்தில் பெய்த பலத்த மழையால் அப்துல்கலாம் மணிமண்டபம் முன்பும்விக்டோரியாநகர், ராஜீவ்காந்திநகர் பகுதியிலும் வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்து நின்றது.
Related Tags :
Next Story