9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சத்துணவு ஊழியர்கள் சாலை மறியல் - 304 பேர் கைது


9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சத்துணவு ஊழியர்கள் சாலை மறியல் - 304 பேர் கைது
x
தினத்தந்தி 27 Nov 2019 4:00 AM IST (Updated: 26 Nov 2019 10:45 PM IST)
t-max-icont-min-icon

தேனியில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் செய்த சத்துணவு ஊழியர்கள் 304 பேர் கைது செய்யப்பட்டனர்.

தேனி,

சத்துணவு ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். சத்துணவு திட்டத்தில் பணிபுரிந்து ஓய்வுபெறும் சத்துணவு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். ஓய்வு பெறும் சத்துணவு ஊழியர்களுக்கு ஒட்டுமொத்த தொகையாக அமைப்பாளர்களுக்கு ரூ.5 லட்சமும், சமையலர், சமையல் உதவியாளர்களுக்கு ரூ.3 லட்சமும் வழங்க வேண்டும். பள்ளி சத்துணவு மையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். விலைவாசி உயர்வுக்கு ஏற்ப உணவூட்டு செலவின தொகையை ஒரு குழந்தைக்கு ரூ.5 வீதம் உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரில் சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் நேற்று சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.

அதன்படி, தேனியில் நேரு சிலை சிக்னல் அருகில் சத்துணவு ஊழியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதற்காக சத்துணவு ஊழியர்கள் பள்ளிவாசல் தெருவில் இருந்து நேரு சிலை சிக்னலுக்கு ஊர்வலமாக வந்தனர். சிக்னல் பகுதியில் அவர்கள் சாலை மறியல் செய்தனர். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌‌ஷங்கள் எழுப்பினர்.

இந்த சாலை மறியலுக்கு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் நிலவழகன் தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் பேயத்தேவன், மாவட்ட செயலாளர் ஜெயபாண்டி, அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாநில துணைத்தலைவர் ராமமூர்த்தி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

மறியலில் ஈடுபட்ட 23 ஆண்கள் உள்பட மொத்தம் 304 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் போலீஸ் வேன்களில் ஏற்றப்பட்டு, தேனியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். பின்னர் மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

Next Story