திண்டுக்கல், பழனி உள்பட 10 இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


திண்டுக்கல், பழனி உள்பட 10 இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 26 Nov 2019 10:00 PM GMT (Updated: 26 Nov 2019 5:37 PM GMT)

அரசு புறம்போக்கு நிலத்தில் வசிப்போருக்கு பட்டா வழங்கக்கோரி, திண்டுக்கல், பழனி உள்பட 10 இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மேற்கு தாலுகா அலுவலகம் முன்பு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் சச்சிதானந்தம் தலைமை தாங்கினார். மாவட்டக்குழு உறுப்பினர் கருப்புச்சாமி முன்னிலை வகித்தார்.

ஒன்றிய செயலாளர் அஜாய்கோ‌‌ஷ், நகர செயலாளர் ஆசாத், ரெட்டியார்சத்திரம் ஒன்றிய செயலாளர் சக்திவேல் உட்பட கட்சி உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது அரசு புறம்போக்கு நிலங்களில் நீண்ட நாட்களாக வசிப்பவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும். நீர்நிலை புறம்போக்கில் வசிப்போருக்கு மாற்று இடம் வழங்க வேண்டும்.

தகுதியான முதியவர்கள், விதவைகளுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌‌ஷமிட்டனர். அதன்பிறகு கோரிக்கைகளை வலியுறுத்தி தாலுகா அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

இதேபோல் நிலக்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு, நிலக்கோட்டை ஒன்றிய செயலாளர் சவுந்தரராஜன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வத்தலக்குண்டு ஒன்றிய செயலாளர் கலைச்செல்வன் முன்னிலை வகித்தார். இதில் மாவட்டக்குழு உறுப்பினர் குணசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது கோரிக்கைகளை நிறைவேற்றும்படி கோ‌‌ஷமிட்டனர்.

மேலும் குஜிலியம்பாறை தாலுகா அலுவலகம் முன்பு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்வராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் ராஜரத்தினம் முன்னிலை வகித்தார். இதில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஆறுமுகம், ஜெயபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வேடசந்தூர் தாலுகா அலுவலகம் முன்பு மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துச்சாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் அருள்செல்வம் முன்னிலை வகித்தார். இதில் ஒன்றிய செயலாளர்கள் முனியப்பன், மலைச்சாமி, மாவட்ட குழு உறுப்பினர் கிரு‌‌ஷ்ணமூர்த்தி மற்றும் வேடசந்தூர், வடமதுரை ஆகிய பகுதிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

நத்தம் தாலுகா அலுவலகம் முன்பு மாவட்ட செயற்குழு உறுப்பினர் பிரபாகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாவட்ட குழு உறுப்பினர் ஸ்டாலின், தாலுகா செயலாளர் சின்னகருப்பன், முன்னாள் கவுன்சிலர் விஜயவீரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பழனி தாலுகா அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில், பழனி நகரசபை முன்னாள் தலைவர் ராஜமாணிக்கம், நகரச் செயலாளர் கந்தசாமி, ஒன்றிய செயலாளர் கமலகண்ணன் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌‌ஷமிட்டனர். பின்னர் அவர்கள், தாலுகா அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

இதேபோல் திண்டுக்கல் கிழக்கு தாலுகா உள்பட மாவட்டத்தில் உள்ள 10 தாலுகா அலுவலகங்கள் முன்பும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story