உத்தவ் தாக்கரே முதல்-மந்திரி ஆகிறார்: நாளை பதவி ஏற்பு விழா


உத்தவ் தாக்கரே முதல்-மந்திரி ஆகிறார்: நாளை பதவி ஏற்பு விழா
x
தினத்தந்தி 27 Nov 2019 5:45 AM IST (Updated: 27 Nov 2019 3:14 AM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்கிறது. நாளை மும்பை தாதர் சிவாஜிபார்க் மைதானத்தில் நடக்கும் விழாவில் உத்தவ் தாக்கரே முதல்-மந்திரியாக பதவி ஏற்கிறார்.

மும்பை, 

மராட்டியத்தில் நேற்று நடந்த திடீர் திருப்பமாக துணை முதல்-மந்திரி அஜித்பவாரும், அவரை தொடர்ந்து முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசும் அடுத்தடுத்து தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.

இதன் மூலம் நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்காமலேயே பாரதீய ஜனதா தலைமையிலான ஆட்சி கவிழ்ந்தது.

பதவி ஏற்ற 4 நாளில் பாரதீய ஜனதா ஆட்சி முடிவுக்கு வந்ததை அடுத்து, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் ஆட்சி அமைக்க தீவிரம் காட்டின. நேற்று மாலை மும்பை புறநகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் 3 கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்தில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், காங்கிரஸ் மாநில தலைவர் பாலசாகேப் தோரட், முன்னாள் முதல்-மந்திரி அசோக் சவான் மற்றும் அக்கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணியை வழிநடத்த ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டது.

மேலும் 3 கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முதல்-மந்திரி பதவிக்கு சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தேர்வு செய்யப்பட்டார். அவரது பெயரை தேசியவாத காங்கிரஸ் மாநில தலைவர் ஜெயந்த் பாட்டீல், காங்கிரஸ் மாநில தலைவர் பாலசாகேப் தோரட் முன்மொழிந்து இருந்தனர்.

முதல்-மந்திரி பதவிக்கு தேர்வு செய்யப்பட்ட உத்தவ் தாக்கரே பேசியதாவது:-

நான் சோனியாகாந்திக்கு இந்த தருணத்தில் நன்றி சொல்ல விரும்புகிறேன். வெவ்வேறு சித்தாந்தங்களை கொண்ட கட்சிகள் ஒன்று சேர்ந்து இருக்கிறோம். 30 ஆண்டுகள் நண்பர்களாக இருந்தவர்கள் எங்களை நம்பவில்லை. ஆனால் நாங்கள் 30 ஆண்டுகளாக யாருக்கு எதிராக போராடினோமோ அவர்கள் என்னை நம்புகிறார்கள். எனது அரசாங்கம் பழிவாங்கும் விதத்தில் செயல்படாது.

பொது மக்கள் இந்த அரசாங்கத்தை தங்கள் சொந்த அரசாங்கமாக நினைக்க வேண்டும். நான் பதவி ஏற்ற பிறகு மூத்த சகோதரரை (பிரதமர் மோடியை இவ்வாறு குறிப்பிட்டார்) சந்திப்பேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், “மும்பை சிவாஜிபார்க் மைதானத்தில் நளை (வியாழக்கிழமை ) புதிய அரசு பதவி ஏற்பு விழா நடக்கிறது. அப்போது மராட்டியத்தின் அடுத்த முதல்-மந்திரியாக உத்தவ் தாக்கரே பதவி ஏற்பார்” என்று கூறினார்.

சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கூறுகையில், உத்தவ் தாக்கரே பதவி ஏற்பு விழாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரை அழைப்போம் என்றார்.

உத்தவ் தாக்கரே தலைமையில் மராட்டியத்தில் புதிய அரசு அமைவது உறுதியாகி இருப்பது சிவசேனா தொண்டர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உத்தவ் தாக்கரே பதவி ஏற்பு விழா நடைபெறும் சிவாஜி பார்க் மைதானத்தில் தான் சிவசேனா நிறுவனர் பால்தாக்கரேயின் சமாதி இருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story