இலவச மடிக்கணினி வழங்கக்கோரி, கோவில்பட்டியில் மாணவிகள் சாலைமறியல்


இலவச மடிக்கணினி வழங்கக்கோரி, கோவில்பட்டியில் மாணவிகள் சாலைமறியல்
x
தினத்தந்தி 27 Nov 2019 3:30 AM IST (Updated: 27 Nov 2019 3:57 AM IST)
t-max-icont-min-icon

இலவச மடிக்கணினி வழங்கக்கோரி கோவில்பட்டியில் மாணவிகள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

கோவில்பட்டி, 

கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 2017-2018, 2018-2019 ஆகிய ஆண்டுகளில் பிளஸ்-2 பயின்ற மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச மடிக்கணினி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, மாணவிகள் நேற்று முன்தினம் கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, கோரிக்கை மனு வழங்கினர். தொடர்ந்து அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 2018-2019-ம் ஆண்டு பிளஸ் -2 படித்து விட்டு, தற்போது உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு நேற்று இலவச மடிக்கணினி வழங்கப்பட்டது.

இதற்கிடையே அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 2017-2018-ம் பிளஸ்-2 பயின்ற மாணவிகள் தங்களுக்கும் இலவச மடிக்கணினி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, நேற்று பள்ளிக்கூடத்தை முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள், கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

உடனே கோவில்பட்டி கிழக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தர்மராஜ் மற்றும் போலீசார் விரைந்து சென்று, மறியலில் ஈடுபட்ட மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து மாணவிகளை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு போலீசார் அழைத்து சென்று, தலைமை ஆசிரியை (பொறுப்பு) ரூத் ரத்தினகுமாரியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது தலைமை ஆசிரியை கூறுகையில், பள்ளியில் இருந்த 479 மடிக்கணினிகளை கடந்த 2018-2019-ம் ஆண்டு பிளஸ்-2 பயின்ற மாணவிகளுக்கு வழங்கி வருகிறோம். இதில் மீதம் இருந்தால் 2017-2018-ம் ஆண்டு பிளஸ்-2 பயின்ற மாணவிகளுக்கும் வழங்குவோம். இல்லையெனில் விரைவில் தமிழக அரசிடம் இருந்து மடிக்கணினிகள் பெறப்பட்டு, மாணவிகளுக்கு வழங்குவோம் என்று கூறினார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Next Story