மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்: ஒரே குடும்பத்தில் 3 பேர் பலி


மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்: ஒரே குடும்பத்தில் 3 பேர் பலி
x
தினத்தந்தி 27 Nov 2019 4:30 AM IST (Updated: 27 Nov 2019 3:57 AM IST)
t-max-icont-min-icon

பனவடலிசத்திரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலியானார்கள்.

பனவடலிசத்திரம்,

தென்காசி மாவட்டம் பனவடலிசத்திரம் அருகே உள்ள தெற்கு பனவடலி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தவசிக்கண்ணு மகன் அய்யப்பன் (வயது 34). இவர் கேரளாவில் பழைய இரும்புக்கடை வைத்து வியாபாரம் செய்து வந்தார். தெற்கு பனவடலி பகுதியில் இவர் புதிதாக வீடு கட்டி உள்ளார். நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) கிரகப்பிரவேசம் நடைபெற உள்ளது.

இதற்காக அய்யப்பன், அவருடைய மனைவி செல்வி (30), அய்யப்பனின் தங்கை ஜோதி (32) ஆகிய 3 பேரும் நேற்று மாலை ஒரே மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு பனவடலிசத்திரத்தில் உள்ள உறவினர்களுக்கு அழைப்பிதழ் கொடுத்தனர். பின்னர் அங்கிருந்து அவர்கள் மீண்டும் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

பனவடலிசத்திரத்தை கடந்து பசும்பொன்நகர் பகுதியில் மோட்டார் சைக்கிள் சென்று கொண்டு இருந்தபோது, அந்த வழியில் வந்த ஒரு கார், மோட்டார் சைக்கிள் மீது வேகமாக மோதியது. இதனால் மோட்டார் சைக்கிளில் இருந்து 3 பேரும் தூக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். 3 பேரும் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை பார்த்து, அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் அவர்களின் உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் நெல்லை-சங்கரன்கோவில் மெயின் ரோட்டில் திரண்டனர். அவர்களின் உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.

மேலும் அவர்கள் திடீரென அங்கு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பஸ், வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவரை உடனடியாக கைது செய்ய வேண்டும். அய்யப்பன் குடும்பத்திற்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும். நெல்லை-சங்கரன்கோவில் சாலையில் 108 ஆம்புலன்ஸ் சேவைகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். வேகத்தடைகள் அமைக்க வேண்டும். காவல்துறை சார்பில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 3 பேரின் உடல்களையும் எடுக்க விடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் தென்காசி துணை போலீஸ் சூப்பிரண்டு கோகுலகிரு‌‌ஷ்ணன், சங்கரன்கோவில் துணை சூப்பிரண்டு (பொறுப்பு) கனகராஜ், தாசில்தார் திருமலைசெல்வி, துணை தாசில்தார் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் கோரிக்கைகளை பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் தெரிவித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து அவர்கள் மறியலை கைவிட்டனர். இந்த மறியல் காரணமாக அங்கு 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பின்னர் அய்யப்பன், செல்வி, ஜோதி ஆகியோரின் உடல்களை போலீசார் கைப்பற்றி பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து பனவடலிசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கார் மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த விபத்தின்போது கார் ஓட்டிவந்த சென்னையை சேர்ந்த முத்துகிரு‌‌ஷ்ணன் என்பவர், பனவடலிசத்திரம் போலீசில் சரண் அடைந்தார். அவர் போலீசாரிடம் கூறுகையில், எனது கார் அவர்களின் மோட்டார் சைக்கிள் மீது மோதவில்லை. மற்றொரு கார் மோதிவிட்டது. ஆனால், அது யாருடைய கார்? என்று தெரியவில்லை என்று கூறியுள்ளார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story