குடும்ப தகராறில், மாற்றுத்திறனாளி குழந்தைகளை கொன்று, தாய் தற்கொலை - கோவை அருகே பரிதாபம்
கோவை அருகே குடும்ப தகராறில் மாற்றுத்திறனாளி குழந்தைகளை கொன்று விட்டு தாய் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
துடியலூர்,
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள குடிமங்கலம் நால் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 45). இவருக்கும் கோவை கவுண்டம்பாளையம்-நல்லாம்பாளையம் ரோட்டில் வ.உ.சி.நகரை சேர்ந்த பேபியின் மகள் கவுரிக்கும் (33) கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
திருமணத்திற்கு பிறகு கணவன், மனைவி இருவரும் வ.உ.சி.நகரில் வசித்து வந்தனர். இவர்களுக்கு திவ்யதர்சினி (13) என்ற மகளும், பிரனேஷ் (11) என்ற மகனும் இருந்தனர்.
இதில் திவ்யதர்சினிக்கு காது கேட்காது, பேச முடியாது. பிரனேசுக்கும் காது கேட்காது, மேலும் அவரால் சரியாக பேசவும், நடக்கவும் முடியாது. இவர்கள் 2 பேரும் கவுண்டம்பாளையம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு அருகில் உள்ள மாற்றுத்திறனாளிகள் சிறப்பு பள்ளியில் படித்து வந்தனர்.
தொழிலாளி சிவக்குமாருக்கு குடிபழக்கம் இருந்தது. இதனால் அவர் அடிக்கடி குடித்துவிட்டு வந்து மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்தார். மேலும் அவர் குடும்ப செலவுக்கு பணம் கொடுக்கவில்லை. இதனை கவுரி கண்டித்ததாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக கடந்த சில மாதங்களாக சிவக்குமாருக்கும், அவருடைய மனைவி கவுரிக்கும் இடையே குடும்ப தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று சிவக்குமார் வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது மீண்டும் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் கவுரி மனமுடைந்து காணப்பட்டார். நேற்று மாலை கவுரியின் தாய் பேபி உறவினரின் திருமண நிகழ்ச்சிக்காக வெளியில் சென்றதாக தெரிகிறது.
இந்த நேரத்தில் வீட்டில் தனியாக இருந்த கவுரி, பள்ளிக்கு சென்று தன்னுடைய குழந்தைகளை வீட்டுக்கு அழைத்து வந்தார். பின்னர் அவருடைய சேலையில் 2 குழந்தைகளையும் தூக்கிலிட்டு கொன்று விட்டு, மற்றொரு சேலையில் தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியில் சென்ற பேபி வீட்டிற்கு வந்தார். அப்போது கதவை திறந்தபோது, மகள் மற்றும் பேரன், பேத்தி தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருப்பதை பார்த்து கதறிதுடித்தார்.
பேபியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர். இதுகுறித்து துடியலூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த துடியலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுரளிசுந்தரம், சப்-இன்ஸ்பெக்டர் சிவசாமி மற்றும் போலீசார் 3 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போதை தெளிந்து தொழிலாளி சிவக்குமார் மீண்டும் வீட்டுக்கு வந்தார். அப்போது அங்கிருந்த உறவினர்கள் அவரை திட்டியதாலும், போலீசாரின் விசாரணைக்கு பயந்தும் அங்கிருந்து தலைமறைவாகிவிட்டார். மகள், பேரன், பேத்திகளை பார்த்து பேபி அழுதது அங்கிருந்தவர்களை கண்கலங்க வைத்தது.
குடும்ப தகராறில் மாற்றுத்திறனாளி குழந்தைகளை கொன்று தாய் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story