வானவில் : ஸ்மார்ட் வீடியோ காலிங் பெல்
‘உக்’ எனும் நிறுவனம் ஸ்மார்ட் காலிங் பெல்லை அறிமுகம் செய்துள்ளது.
இது ஸ்மார்ட் உலகம். நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், நவீன தொழில்நுட்ப சாதனங்களை பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் அதில் பல சாதக அம்சங்கள் இருப்பதால் நவீனத்துக்கு மாறுவதற்கு யாரும் தயங்குவதில்லை. ‘உக்’ எனும் நிறுவனம் ஸ்மார்ட் காலிங் பெல்லை அறிமுகம் செய்துள்ளது. உங்கள் வீட்டு அழைப்பு மணியை யார் அழுத்தியது, வந்திருப்பது யார் என்பதை நீங்கள் உங்கள் ஸ்மார்ட் போனிலேயே பார்த்துவிட முடியும். இதில் உள்ள கேமரா வந்திருக்கும் நபரின் உருவத்தை வெகு நேர்த்தியாக படமெடுத்துவிடும். மேலும் இரவிலும் இது செயல்படும் தன்மை கொண்டதால் உங்கள் வீட்டு அருகில் யார் செல்கிறார்கள் என்ற விவரத்தையும் தெரிந்து கொள்ள முடியும். இதை நிறுவுவது மிகவும் எளிது. ஸ்குரூ அல்லது இரண்டு புறமும் ஒட்டும் தன்மை உடைய டேப் இருந்தால் போதுமானது.
இதில் உள்ள பேட்டரிக்கு தேவையான மின்சாரம் மட்டும் வயர் மூலம் இதற்கு அளிக்க வேண்டும். இதில் உள்ள பேட்டரி 8 மாதம் வரை தொடர்ந்து செயல்படும். இது வை-பை மூலம் செயல்படுவதால் வேறு எந்த வயர் இணைப்பும் தேவைப்படாது. காலிங்பெல் சப்தம் எழுப்பும் கருவியை வீட்டினுள் மின் இணைப்பு சாக்கெட்டில் சொருகினால் போதுமானது. வெளியிலிருந்து யார் பொத்தானை அழுத்தினாலும் வழக்கம்போல அழைப்பு மணி ஓசை கேட்கும். ஆனால் வந்திருப்பவர் முகத்தை உங்கள் ஸ்மார்ட்போனில் பார்க்கலாம். விற்பனை பிரதிநிதியாக இருந்தால் ஸ்மார்ட்போன் மூலமே பதிலளித்து போகச் சொல்லி விடலாம். 162 டிகிரி கோணம் வரை வீடியோ காட்சிகளை பதிவு செய்யும். இதனால் இதன் கேமரா பார்வையிலிருந்து யாரும் தப்ப முடியாது. இதில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (ஏ.ஐ.) பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் உங்கள் வீட்டுக்கு அடிக்கடி வரும் நபர்களை இது எளிதில் அறிந்து கொள்ளும். இதை நிறுவுவது எளிதாக இருந்தாலும் இதை மற்றவர்கள் அவ்வளவு எளிதில் அகற்றிவிட முடியாது.
ஒருவேளை அத்தகைய முயற்சியில் எவரேனும் ஈடுபட்டால், எச்சரிக்கை ஒலி எழுப்பி அனைவரையும் எச்சரித்துவிடும். வீட்டிலிருந்து 16 அடி தூரத்திலிருப்பவரின் முகத்தையும் எளிதில் அடையாளம் காட்டும். அழைப்பு மணி மட்டுமல்ல, இரவு பகலாக உங்கள் வீட்டுக் காவலனாகவும் இந்த ஸ்மார்ட் பெல் நிச்சயம் இருக்கும். இதன் விலை ரூ.5,600.
Related Tags :
Next Story