ராணிப்பேட்டை அருகே, பள்ளிக்கு வராத தலைமை ஆசிரியரை கண்டித்து மாணவர்கள் சாலை மறியல்
பல நாட்களாக பள்ளிக்கு தலைமை ஆசிரியர் வராததால் ஆத்திரமடைந்த மாணவ, மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சிப்காட் (ராணிப்பேட்டை),
வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையை அடுத்த அவரக்கரையில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது. இங்கு தலைமைஆசிரியராக சிவகுமார் என்பவர் பணியாற்றி வருகிறார். ஆனால் அவர் பள்ளிக்கு வருவதில்லை என கூறப்படுகிறது. பல மாதங்களாக அவர் வராததால் பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை ஒரே ஆசிரியர் பாடம் நடத்தி வருகிறார். அதன் காரணமாக மாணவர்களுக்கு கல்வி கற்பதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பள்ளி மாணவ, மாணவிகள் நேற்று காலை அவரக்கரை அருகே ராணிப்பேட்டை- தெங்கால் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இந்த மறியலில் அவர்களுடன் பெற்றோர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர். இந்த மறியலால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இது பற்றி தகவலறிந்த சிப்காட் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவர்கள், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இது குறித்து விசாரித்த போது பள்ளி தலைமை ஆசிரியர் உடல்நிலை சரியில்லாமல் விடுமுறையில் இருப்பதாக தெரிய வந்தது. இது தொடர்பாக கல்வி அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதை தொடர்ந்து அனைவரும் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story