1,360 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்பு


1,360 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்பு
x
தினத்தந்தி 28 Nov 2019 4:15 AM IST (Updated: 27 Nov 2019 10:28 PM IST)
t-max-icont-min-icon

தேனியில் 1,360 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டார்.

தேனி,

தேனியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா நேற்று நடந்தது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமை தாங்கினார். இதில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு, சமுதாய வளைகாப்பு விழாவை தொடங்கி வைத்து, 1,360 கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கினார். பின்னர், அட்சதை தூவி கர்ப்பிணிகளை ஆசீர்வாதம் செய்தார். விழாவில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

வசதியுள்ளவர்கள் தங்களது கர்ப்பிணிகளுக்கு ஆடம்பரமான முறையில் வளைகாப்பு நடத்துகின்றனர். ஆனால் சமூகத்தில் ஏழை-எளிய குடும்பத்தில் உள்ள கர்ப்பிணிகளுக்கு வசதி வாய்ப்பு குறைவால் வளைகாப்பு நடத்த முடியாத காரணத்தால் அவர்களும், அவர்களுடைய கருவிலுள்ள குழந்தைகளும் சிறிதளவும் மனதளவில் பாதிக்கப்படக்கூடாது என்ற தொலைநோக்கு பார்வையுடன், சமுதாய வளைகாப்பு திட்டத்தை ஜெயலலிதா தொடங்கி வைத்தார். இதுவரை தமிழகத்தில் 4 லட்சத்து 81 ஆயிரத்து 210 கர்ப்பிணிகளுக்கு அரசால் சமுதாய வளைகாப்பு நடத்தப்பட்டு உள்ளது. நடப்பாண்டில் மட்டும் 71 ஆயிரத்து 280 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு விழா நடத்தப்பட்டுள்ளது. சமுதாய வளைகாப்பு திட்டம் தொடங்கப்பட்ட பின்னர், குழந்தைகளின் பிறப்பு விகிதம் அதிகரித்துள்ளது. கர்ப்பிணிகளின் இறப்பு விகிதம் குறைந்துள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர், கர்ப்பிணிகளுக்கு 5 வகையான கலவை சாதங்கள் வழங்கப்பட்டன. அப்போது கர்ப்பிணிகளுக்கு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உணவு பரிமாறினார். பின்னர் கர்ப்பிணிகளுடன் அமர்ந்து ஓ.பன்னீர்செல்வம், கலெக்டர் பல்லவி பல்தேவ் ஆகியோர் உணவு சாப்பிட்டனர்.

இந்த விழாவில் கம்பம் எம்.எல்.ஏ. ஜக்கையன், வருவாய் அலுவலர் கந்தசாமி, பெரியகுளம் சப்-கலெக்டர் சினேகா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஹெலன்ரோஸ், அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் சையதுகான், துணை செயலாளர் முறுக்கோடை ராமர், சின்னமனூர் ஒன்றிய செயலாளர் விமலேசுவரன் மற்றும் அரசு அலுவலர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Next Story