காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க நாடாளுமன்றத்தில் சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும்


காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க நாடாளுமன்றத்தில் சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும்
x
தினத்தந்தி 28 Nov 2019 4:15 AM IST (Updated: 28 Nov 2019 12:38 AM IST)
t-max-icont-min-icon

காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க நாடாளுமன்றத்தில் சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்தி உள்ளது.

தஞ்சாவூர்,

தஞ்சையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் 2 நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது. இதன் நிறைவு நாள் நிகழ்ச்சிக்கு மாவட்ட பொருளாளர் பாலசுப்பிரமணியன், நிர்வாகக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாட்ட செயலாளர் பாரதி வரவேற்றார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய நிர்வாக குழு உறுப்பினர் மகேந்திரன் கலந்து கொண்டு பேசினார். முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக அரசு உடனடியாக உள்ளாட்சித்தேர்தலை நடத்த வேண்டும். உள்ளாட்சி அமைப்புகள் இல்லாததால் சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கணக்குகள் தெரிவிக்கிறது. எனவே பஞ்சாயத்துராஜ் சட்டத்தின் படி தேர்தலை உடனடியாக நடத்திட வேண்டும். ஹைட்ரோகார்பன் திட்டத்தை நிறுத்தி வைப்பதாக ஓ.என்.ஜி.சி. நிறுவனம் அறிவித்துள்ளது. இது மக்களின் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி. ஆனால் அதே நேரத்தில் வேறு ஒரு பன்னாட்டு நிறுவனத்துக்கு எரிவாயு உள்ளிட்டவைகள் எடுக்க மத்திய அரசு அனுமதிக்க கூடாது. காவிரி டெல்டா மாவட்டங்களை ஒருங்கிணைந்த பாதுகாப்பு வேளாண் மண்டலமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். இதற்கு நாடாளுமன்றத்தில் சிறப்பு சட்டத்தை மத்திய அரசு இயற்ற வேண்டும்.

அரசியல் குழப்பம்

மராட்டியத்தில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா கட்சியின் கூட்டணி ஆட்சி பதவியேற்க உள்ளது. அங்கு குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க முயன்ற பாரதீய ஜனதாவுக்கு வரலாறு காணாத மரண அடி விழுந்துள்ளது. அவர்களது ராஜதந்திரம் அங்கு எடுபடாமல் போனது. பாரதீய ஜனதாவும், சிவசேனாவும் கொள்கை அடிப்படையில் ஒரே மாதிரியாக இருந்தும் அவர்களுக்குள் விட்டுகொடுக்கும் பக்குவம் இல்லை. இதுவே அங்கு ஏற்பட்ட அரசியல் குழப்பத்துக்கு காரணம்.

பயிர்காப்பீட்டு பிரிமீயம் தொகையை அரசு வசூல் செய்கிறது. ஆனால் இழப்பீடு கொடுக்கும் பணியை தனியாரிடம் ஒப்படைக்கிறது. இதனை மாற்றி இழப்பீடு கொடுக்கும் பணியையும் அரசே செய்ய வேண்டும். தஞ்சையில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் நடந்து வருகிறது. குடிநீர், சாலை வசதி, கழிவறை வசதி உள்ளிட்ட மக்களின் அடிப்படை வசதிகளை முன்வைத்து ஸ்மார்ட் சிட்டி பணிகள் நடக்க வேண்டும். ஆனால் வாழ்வாதாரத்தை கெடுக்கும் வகையில் இந்த திட்டம் இருக்கக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story