உலக சாதனை படைத்த பள்ளி மாணவர்கள் 3 பேருக்கு பாராட்டு


உலக சாதனை படைத்த பள்ளி மாணவர்கள் 3 பேருக்கு பாராட்டு
x
தினத்தந்தி 27 Nov 2019 10:00 PM GMT (Updated: 27 Nov 2019 7:29 PM GMT)

சிவகங்கையில் சோழன் உலக சாதனை புத்தக நிறுவனம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் யோகாசனத்தில் உலக சாதனை படைத்த 3 பேருக்கு கலெக்டர் ஜெயகாந்தன் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

சிவகங்கை, 

சிவகங்கையில் சோழன் உலக சாதனை புத்தக நிறுவனம் சார்பில் உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை சிவகங்கை கலெக்டர் ஜெயகாந்தன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில் சிவகங்கையில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் பயிலும் பிரனவ்குமார்(வயது 10) என்பவர் ஒரு நிமிடத்தில் 116 ஜம்பிங் ஜோப்ஸ் என்ற உடற்பயிற்சியை செய்து சாதனை படைத்தார். இந்த உடற்பயிற்சி இதற்கு முன்பு ஒரு நிமிடத்தில் 103 முறை செய்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோன்று, சிவகங்கையில் உள்ள சாய் பாலமந்திர் மழலையர் பள்ளியில் பயிலும் பிரனீத்குமார்(5) என்பவர் 35 நிமிடம் 10 வினாடிகள் சக்கராசனத்தில் தனது உடலை சமநிலைப்படுத்தி சாதனை படைத்துள்ளார். ஏற்கனவே உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த பிரியன்சி பட்டேல் என்பவர் 15 நிமிடங்கள் 55 வினாடிகள் சக்கராசனத்தில் தனது உடலை சமநிலைப்படுத்தி சாதனை படைத்திருந்தார்.

அதேபோல்,கண்டாங்கிப்பட்டியில் உள்ள மெண்ட் லிட்ரா ஜீ பள்ளியில் பயிலும் ராகவ் அய்யனார்(8) என்பவர் சக்கராசனத்தில் இருந்தவாறு தனது வயிற்றின் மீது 3 கிலோ எடையை வைத்து 30 நிமிடம் 55 வினாடிகள் தனது உடலை சமநிலையில் வைத்து சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்பு உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த பிரியன்சி பட்டேல் என்பவர் சக்கர ஆசனத்தில் இருந்தவாறு தனது வயிற்றில் 3 கிலோ எடையை வைத்து 11 நிமிடங்கள் வரை இருந்தது சாதனையாக பதிவு பெற்றுள்ளது.

இந்த சாதனை நிகழ்வுக்கு சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் நிறுவனர் நீலமேகம் நிமலன் நடுவராக செயல்பட்டார். இதையடுத்து நடைபெற்ற நிகழ்ச்சியில் உலக சாதனை படைத்த பள்ளி மாணவர்களுக்கு கலெக்டர் ஜெயகாந்தன் பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார். நிகழ்ச்சியில் மாணவ-மாணவிகள், பெற்றோர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Next Story