கடந்த 10 மாதத்தில் ரெயிலில் அடிபட்டு 1,617 பேர் உயிரிழப்பு - 556 உடல்கள் அடையாளம் காணமுடியாமல் போலீசார் திணறல்


கடந்த 10 மாதத்தில் ரெயிலில் அடிபட்டு 1,617 பேர் உயிரிழப்பு - 556 உடல்கள் அடையாளம் காணமுடியாமல் போலீசார் திணறல்
x
தினத்தந்தி 28 Nov 2019 4:30 AM IST (Updated: 28 Nov 2019 1:01 AM IST)
t-max-icont-min-icon

சென்னை ரெயில்வே காவல் மாவட்டத்தில் கடந்த 10 மாதத்தில் ரெயிலில் அடிபட்டு 1,617 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் 556 உடல்களை அடையாளம் காணமுடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

சென்னை, 

இன்றைய சூழலில் மக்கள் தொகை பெருக்கத்துக்கு ஏற்ப, வாகனங்கள் பெருக்கமும் அதிகரித்து கொண்டே செல்கிறது. வெளியூர்களுக்கு பஸ், கார் உள்ளிட்ட வாகனத்தில் செல்ல வேண்டுமானால், போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும்நிலை உள்ளது. எனவே போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொள்ளாமல் இருக்க மக்கள் அதிகம் தேர்ந்தெடுப்பது ரெயில் பயணம் தான்.

இந்த பயணத்தையே பாதுகாப்பாகவும் கருதுகின்றனர். அதே வேளையில் ஓடும் ரெயிலில் ஏறுவது, படியில் நின்றுக்கொண்டு சாகச பயணம் செய்வது உயிருக்கு ஆபத்தாகிவிடுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ரெயில் விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கையை கணக்கிட்டு பார்த்தால், பலி எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

சென்னை ரெயில்வே காவல் மாவட்ட கண்காணிப்பின் கீழ் எம்.ஜி.ஆர். சென்டிரல், எழும்பூர், மாம்பலம், தாம்பரம், கொருக்குப்பேட்டை, ஜோலார்பேட்டை, விழுப்புரம், ஓசூர், சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, ஊட்டி உள்ளிட்ட ரெயில் நிலையங்கள் செயல்படுகிறது.

கடந்த ஜனவரி மாதம் முதல் அக்டோபர் மாதம் 30-ந்தேதி வரையிலான 10 மாதத்தில் சென்னை ரெயில்வே காவல் மாவட்டத்தில் நடந்த 1,556 விபத்துக்களில் 1,617 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தோரில் 90 சதவீதம் ஆண்கள் ஆவர். அதில் பெரும்பாலும் இளம்வயதினர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ரெயிலில் அடிபட்டு இறந்தவர்களில் 1,061 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. 556 உடல்களை அடையாளம் காணமுடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். தமிழகத்தில் அனைத்து ரெயில் நிலையங்களிலும் விபத்து நடக்கிறது என்றாலும், தாம்பரம் ரெயில் நிலையத்தில் அதிகபட்ச உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இதில் குறைவான எல்லை கொண்ட பட்டியலில் மாம்பலம் ரெயில் நிலையத்தில் அதிக பட்ச உயிரிழப்பு ஏற்படுகிறது.

இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-

பெரும்பாலான இளைஞர்கள் எப்பொழுதும், செல்போனே தனது உலகம் என்று அதில் பொழுதை கழிக்கின்றனர். பல நேரங்களில் இவர்கள் செல்போனில் பேசியபடி, தங்கள் கவனத்தை சிதறடித்து, ரெயில் வருவதை கூட கவனிக்காமல் தண்டவாளத்தை கடக்கின்றனர். ஒரு சிலர் ஆபத்து என்று தெரிந்தும் தண்டவாளத்தில் நடந்து செல்கின்றனர்.

கல்லூரி மாணவர்கள் பஸ்சில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்வது போல, ரெயில் படிக்கட்டில் தொடங்கியபடி பயணம் செய்கின்றனர். தற்போது கூட கோவையில் தண்டவாளத்தில் உட்கார்ந்து மது அருந்திய கல்லூரி மாணவர்களின் நிலை என்ன ஆனது? என்பது அனைவரும் அறிந்தது. அனாவசியமாக ஏற்படும் இது போன்ற உயிரிழப்புகளை தடுக்க வேண்டுமானால், பயணிகள் தண்டவாளத்தை கடக்காமலும், ரெயில் படிக்கட்டில் பயணிப்பதை போலீசார் தடுத்து நிறுத்த வேண்டும். மேலும் விழிப்புணர்வும் மிகவும் அவசியம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story