அன்னவாசல் பகுதியில் தொடர் வழிப்பறி: சட்டக்கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் கைது


அன்னவாசல் பகுதியில் தொடர் வழிப்பறி: சட்டக்கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் கைது
x
தினத்தந்தி 27 Nov 2019 10:15 PM GMT (Updated: 27 Nov 2019 7:40 PM GMT)

அன்னவாசல் பகுதியில் தொடர் வழிபறியில் ஈடுபட்டு வந்த சட்டக்கல்லூரி மாணவர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

அன்னவாசல்,

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள நெருஞ்சிக்குடி பகுதியை சேர்ந்தவர் பாண்டித்துரை (வயது 41). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு நெறிஞ்சிக்குடியில் இருந்து புதுக்கோட்டைக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற போது, கொல்லம்பட்டி விளக்கு அருகே மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்மநபர்கள் அவரிடம் முகவரி கேட்பது போல் கத்தியைகாட்டி மிரட்டி அவரிடம் இருந்த பணத்தை பறித்து சென்றனர். இதற்கு முன்பு கடந்த வாரங்களில் பெருமநாடு அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் 5 பவுன் தங்க சங்கிலியையும், வாலிபர் ஒருவரிடம் செல்போனையும் மர்ம நபர்கள் பறித்து சென்றுள்ளனர்.

இந்த பகுதியில் நடைபெறும் தொடர் வழிப்பறியை தடுக்கும் பொருட்டு புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்தி குமார் உத்தரவின் படி, இலுப்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சிகாமணி தலைமையில், விராலிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோகரன், இலுப்பூர் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் மதியழகன், பாபு மற்றும் போலீசார் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டு கடந்த சில நாட்களாக தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். முதற்கட்ட விசாரணையில் வழிப்பறி நடந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த போலீசார், கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தீவிரமாக விசாரணை நடத்தினர்.

3 பேர் கைது

தொடர்ந்து விசாரணையில் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் அந்த பகுதிகளில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்ததாக புதுக்கோட்டை அகரப்பட்டியை அடுத்த பெருமாள்பட்டியை சேர்ந்த திருமலை மகன் தினே‌‌ஷ் (வயது 22), அகரப்பட்டி புரகரபண்ணையை சேர்ந்த 18 வயது சிறுவன், திருவப்பூர் ஆண்டாள்புரம் காலனியை சேர்ந்த கண்ணன் மகன் அஜீத் (21) ஆகிய 3 பேரையும் பிடித்து தீவிர விசாரணை நடத்தியதில், அவர்கள் 3 பேரும் வழிப்பறியில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர். பின்னர் போலீசார் 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதில் அஜீத் சட்டக்கல் லூரியில் சட்டப்படிப்பு இரண்டாம் ஆண்டு படித்து வருவதாகவும், தினே‌‌ஷ் என்ற மாணவன் கல்லூரி ஒன்றில் படித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இவர்கள் மீது மற்ற போலீஸ் நிலையங்களில் திருட்டு வழக்குகள் உள்ளது என போலீசார் தெரிவித்தனர்.


Next Story