அரசு பணியாளர்கள் உண்ணாவிரதம்


அரசு பணியாளர்கள் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 28 Nov 2019 4:15 AM IST (Updated: 28 Nov 2019 1:17 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் அரசு பணியாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி,

8-வது ஊதியக்குழு நிலுவைத்தொகையை 1.1.2016 முதல் வழங்கிட வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு பணியாளர்கள் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே நடந்த போராட்டத்துக்கு அரசுப்பணியாளர் சங்க மாநில செயலாளர் முருகானந்தம் தலைமை தாங்கி பேசினார். மாநில துணைத்தலைவர்கள் சோனை கருப்பையா, உதயகுமார், செயற்குழு உறுப்பினர் ரமே‌‌ஷ் உள்பட அனைத்து துறை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

உண்ணாவிரத போராட்டத்தை மாநில சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

ரூ.30 ஆயிரம் கோடி வருவாய்

டாஸ்மாக் பணியாளர்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து, இந்த அரசுக்கு ரூ.30 ஆயிரம் கோடி வருவாயை சுலபமாக கொடுத்து கொண்டிருக்கிறார்கள். தமிழக நிதிநிலை அறிக்கையில் மிக அதிகமான தொகையும் இதுதான். இவ்வளவு தொகையை சம்பாதித்து கொடுக்கும் டாஸ்மாக் பணியாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற முதல்-அமைச்சர் மறுத்து வருகிறார்.

இன்றைய தினம் கோரிக்கைகளுக்காக மாநிலம் முழுவதும் 5 மையங்களில் மண்டல அளவில் முன்னணி தொழிலாளர்களை அழைத்து போராட்டம் நடந்து வருகிறது. நாளைக்கு என்ன நிலைவரும் என சொல்லமுடியாது. ரே‌‌ஷன்கடை பணியாளர்கள் 3 ஆண்டுகளாக கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் அது அரசால் நிறைவேற்றப்படவில்லை. அதற்காக திருச்சியில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு மறியல் போராட்டம் நடத்தினர்.

கருப்பு சட்டை அணிந்து பணி

இப்போது அவர்கள் அடுத்த கட்டத்திற்கு சென்று விட்டனர். மாதந்தோறும் தாலுகா அளவில் நடத்தப்படும் கூட்டத்திற்கு செல்லும்போது ரே‌‌ஷன்கடை பணியாளர்கள் கருப்பு சட்டை அணிந்து செல்வது என முடிவெடுத்து இருக்கிறார்கள்.

ரே‌‌ஷன்கடை பணியாளர் நிலை என்ன? மக்கள் நிலை என்ன? அரசின் நிலை என்ன? என்று துண்டுபிரசுரம் அடித்து பொதுமக்களிடம் டிசம்பர் 6-ந் தேதி கொண்டு செல்கிறார்கள். எனவே, வருகிற உள்ளாட்சி மற்றும் பொதுத்தேர்தலை மனதில் கொண்டு, அரசு அதற்குள்ளாக அரசு பணியாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story