காப்பகத்தில் இருந்து அனுமதியின்றி சென்னைக்கு விமானத்தில் சென்று விட்டு 3 நாள் கழித்து திரும்பிய இளம்பெண்கள்


காப்பகத்தில் இருந்து அனுமதியின்றி சென்னைக்கு விமானத்தில் சென்று விட்டு 3 நாள் கழித்து திரும்பிய இளம்பெண்கள்
x
தினத்தந்தி 29 Nov 2019 4:45 AM IST (Updated: 28 Nov 2019 8:36 PM IST)
t-max-icont-min-icon

திருச்சி காப்பகத்தில் இருந்து அனுமதியின்றி சென்னைக்கு விமானத்தில் சென்று விட்டு 3 நாட்கள் கழித்து திரும்பிய இளம்பெண்களை இடமாற்றம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் போலீசார் குவிக்கப்பட்டனர்.

திருச்சி,

திருச்சி சுப்பிரமணியபுரம் ரெங்கநகரில் கிறிஸ்தவ அமைப்புக்கு சொந்தமான ‘மோசே மினிஸ்ட்ரீஸ்’ என்ற பெயரிலான ஆதரவற்ற பெண்கள் காப்பகம் 1994-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இதனை பாதிரியார் கிதியோன் ஜேக்கப் என்பவர் நிர்வகித்து வருகிறார். இந்த காப்பகத்தில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த கைவிடப்பட்ட பெண் குழந்தைகள், இளம்பெண்கள் தஞ்சம் அடைந்து பராமரிக்கப்பட்டு வந்தனர். கடந்த 2017-ம் ஆண்டு காப்பகத்தில் உள்ள சிறுமிகளுக்கு பல்வேறு துன்புறுத்தல்கள் கொடுக்கப்பட்டதாக திருச்சி மாவட்ட நிர்வாகத்திற்கு புகார்கள் வந்தன. அதன் அடிப்படையில் அப்போதைய சமூக நலத்துறை மற்றும் குழந்தைகள் நல அலுவலர்கள் ஆய்வு நடத்தினர். அப்போது அந்த காப்பகம் அரசின் உரிய அனுமதியின்றி செயல்பட்டு வருவதும், உரிய ஆவணங்கள் பராமரிக்கப்படாததும் கண்டறியப்பட்டது.

பாதிரியார் கைது

இது தொடர்பாக காப்பக நிர்வாகியான பாதிரியார் கிதியோன் ஜேக்கப் மீது, திருச்சி கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே இக்காப்பகம் சட்டவிரோதமாக நடத்தப்படுவதாக ‘மாற்றம் இந்தியா’ அமைப்பின் இயக்குனர் பாடம் நாராயணன் என்பவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனுதாக்கல் செய்தார். ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் அப்போதைய நீதிபதி தீப்தி அறிவுநிதி தலைமையிலான குழுவினர் காப்பகத்தில் ஆய்வு செய்து கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்தனர்.

இதற்கிடையில் காப்பகத்தில் தங்கி உள்ள சிறுமிகள் தங்களின் குழந்தைகள் என்றும், அவர்களை மீண்டும் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் உசிலம்பட்டியை சேர்ந்த சிலர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல் செய்தனர். ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் காப்பகத்தில் உள்ள சிறுமிகள், அவர்களை உரிமை கொண்டாடியவர்களுக்கும் மரபணு சோதனை நடத்தப்பட்டது. மேலும் காப்பக நிர்வாகம் திருச்சி மாவட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு சமூக நலத்துறை அதை ஏற்று பராமரிக்க தொடங்கியது. மேலும் சி.பி.ஐ. விசாரணை நடத்த கோர்ட்டு உத்தரவிட்டதன்பேரில், காப்பகத்தில் இருந்த 89 சிறுமிகள் மற்றும் நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தி முறைகேடு நடந்ததற்கான பல்வேறு ஆவணங்களை கைப்பற்றினர். காப்பக குழந்தைகளுக்கு திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் மரபணு சோதனையும் நடத்தப்பட்டது. இதற்கிடையே வெளிநாடு தப்பிச்சென்று திரும்பிய பாதிரியார் கிதியோன் ஜேக்கப்பை, 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் சி.பி.ஐ. அதிகாரிகள் சென்னை விமான நிலையத்தில் கைது செய்தனர்.

9 இளம்பெண்கள்

அதன்பிறகு காப்பகம் எவ்வித பிரச்சினையும் இன்றி செயல்பட்டு வந்தது. காப்பக நிர்வாகம் மாவட்ட சமூக நலத்துறை கட்டுப்பாட்டில் இருப்பதால் வெளியூர் செல்ல வேண்டுமானால் இங்குள்ள இளம்பெண்கள் உரிய அனுமதி பெற்ற பின்னரே செல்ல முடியும். விதிகளை மீறி செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இந்த நிலையில் காப்பகத்தில் மீண்டும் ஒரு பிரச்சினை தலைதூக்க தொடங்கியது.

அதாவது காப்பகத்தில் தங்கி இருந்த 9 இளம்பெண்கள், எவ்வித அனுமதியும் இன்றி கடந்த மாதம் சென்னைக்கு விமானத்தில் சென்றுவிட்டு மீண்டும் காப்பகம் திரும்பி இருப்பதாக கூறப்படுகிறது. அதுவும் சென்னை சென்ற இளம்பெண்கள் அங்கு 3 நாட்கள் தங்கிவிட்டு திரும்பி இருப்பதாக பரபரப்பு புகார் எழுந்தது. இதுதொடர்பாக மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் தமீம்முன்னிசா தலைமையிலான குழுவினர் நேற்று முன்தினம் ரெங்கநகரில் உள்ள காப்பகத்திற்கு சென்று நேரில் விசாரணை நடத்தினர். ஆனால், அங்கிருந்தவர்கள் முரண்பட்ட தகவலை தெரிவித்தனர். மேலும் விதிகளை மீறி சென்னைக்கு சென்ற இளம்பெண்களை அடையாளம் காட்டவும் மறுத்து விட்டனர் 9 இளம் பெண்களையும் விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து சென்ற நபர் யார்? என்றும், அவர்களுக்கு டிக்கெட் எடுத்து உதவிய நபர் யார்? என்றும் விசாரித்தனர். அங்குள்ள பராமரிப்பு பதிவேட்டை ஆய்வு செய்து 9 இளம்பெண்கள் யார்? என்பதை தெரிந்து கொண்டனர்.

இடமாற்ற உத்தரவு

பின்னர், இது தொடர்பாக சமூக நலத்துறை அதிகாரி தமீம்முன்னிசா, 9 இளம்பெண்கள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசுவிடம் அறிக்கை தாக்கல் செய்து பரிந்துரைத்தனர். அதை கலெக்டர் ஏற்று, 9 பேரையும் தஞ்சாவூரில் உள்ள பெண்கள் காப்பகத்திற்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்டார்.

ஆனால், காப்பகத்தில் உள்ள 9 பேரும் தஞ்சைக்கு செல்ல மறுத்து விட்டனர். அதே வேளையில் மாவட்ட கலெக்டர் உத்தரவை நிறைவேற்றும் வகையில் அவர்களை தஞ்சைக்கு இடமாற்றம் செய்யும் நடவடிக்கை நேற்று தொடங்கியது. அதற்காக காப்பகத்திற்கு மாநகர போலீஸ் துணை கமி‌‌ஷனர் நி‌ஷா நேரடியாக சென்று விசாரணை நடத்தினார். அவர், கலெக்டர் உத்தரவை எடுத்து கூறியும் காப்பகத்தில் உள்ள அப்பெண்கள் ஏற்க மறுத்து விட்டனர். அதே வேளையில் குற்றம்சாட்டப்பட்ட 9 இளம்பெண்களும் காப்பகத்தில் இல்லை என்பதும் தெரியவந்தது. மேலும் காப்பகம் முன்பு திருச்சி கண்டோன்மெண்ட் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தவேதவள்ளி தலைமையில் ஏராளமான பெண் போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை ஐகோர்ட்டில் மனு

இதற்கிடையே பிரச்சினைக்குரிய 9 இளம்பெண்களும் நேற்று முன்தினம் இரவோடு இரவாக காப்பகத்தில் இருந்து வெளியேறி, மதுரைக்கு சென்று ஐகோர்ட்டு கிளையில் தங்களை தஞ்சாவூருக்கு இடமாற்றம் செய்ததை ஏற்க முடியாது என்றும், தொடர்ந்து திருச்சி காப்பகத்திலேயே இருக்க அனுமதிக்க வேண்டும் என மனு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அவர்களை மதுரை ஐகோர்ட்டுக்கு அழைத்து சென்றவர்கள் யார்? என்பதும் புரியாத புதிராகவே உள்ளது. இதுதொடர்பாகவும் விசாரணை நடந்து வருகிறது.

இந்த சம்பவம் திருச்சியில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story