தென்பெண்ணை ஆறு விவசாயிகளின் உரிமை நிலைநாட்டப்படும் - முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி


தென்பெண்ணை ஆறு விவசாயிகளின் உரிமை நிலைநாட்டப்படும் - முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி
x
தினத்தந்தி 29 Nov 2019 4:15 AM IST (Updated: 28 Nov 2019 11:20 PM IST)
t-max-icont-min-icon

தென்பெண்ணை ஆறு விவசாயிகளின் உரிமை நிலைநாட்டப்படும் என்று திருப்பத்தூர் புதிய மாவட்ட தொடக்க விழாவில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்தார்.

திருப்பத்தூர், 

வேலூர் மாவட்டத்தில் இருந்து பிரித்து புதிதாக உருவாக்கப்பட்ட திருப்பத்தூர் மாவட்டத்தை தொடங்கி வைத்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

சந்தனமும், ஜவ்வாதும் சேர்ந்து மணக்கும் திருப்பத்தூர் மாவட்டமானது வேலூர் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு 35-வது மாவட்டமாக உங்கள் முன் இன்று உதயமாகி இருக்கிறது. மாற்றமின்றி முன்னேற்றமில்லை. முன்னேற்றமில்லையெனில் வரலாறு இல்லை. நிர்வாக வசதிக்காகவும், அரசு நலத்திட்ட உதவிகள் மக்களை எளிதில் சென்றடைவதற்காகவும் பெரிய மாவட்டங்கள் பிரிக்கப்படுகின்றன.

திருப்பத்தூர் பகுதி விவசாயம் நிறைந்த பகுதி. விவசாயிகளும், பொதுமக்களும் அரசு சேவைகளை பெறுவதற்காக வேலூருக்கு 2 மணி நேரம் பயணம் செய்ய வேண்டி உள்ளது. இதனை தவிர்க்க திருப்பத்தூரை மாவட்டமாக உருவாக்க அமைச்சர்கள் கே.சி.வீரமணி, நிலோபர் கபில் ஆகியோர் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வந்தனர். கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது பலதரப்பட்ட மக்களும் கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் இன்று திருப்பத்தூர் மாவட்டம் உதயமாகி இருக்கிறது.

ஏலகிரி, ஜவ்வாதுமலை சூழ்ந்த பகுதியாக திருப்பத்தூர் அமைந்துள்ளது. பீமன் நீர்வீழ்ச்சி, அமிர்தி ஆகிய சுற்றுலா தலங்களும் இங்கு உள்ளன. செய்யாறு, மிருகண்டாநதி, கமண்டலநாகநதி ஆகியவையும் இங்குதான் உருவாகின்றன.

ஆசியாவிலேயே 2-வது மிகப்பெரிய சந்தன கிடங்கு இங்குதான் உள்ளது. அதனால் தான் சந்தன மாநகரம் என்று திருப்பத்தூரை அழைக்கிறார்கள். ஆம்பூர் பிரியாணி உலகப்புகழ்பெற்றது. தோல் தொழிற்சாலைகள் அன்னிய முதலீட்டை பெற்றுத்தருகிறது. அதோடு மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கி வருகிறது. ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் முக்கிய சந்திப்பாக விளங்குகிறது. காவலூரில் உள்ள விண்வெளி ஆய்வுமையம் திருப்பத்தூருக்கு பெருமை சேர்க்கிறது.

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 1790-ம் ஆண்டில் திருப்பத்தூர் மாவட்டம் உருவாக்கப்பட்டு 3-4-1792 வரை செயல்பாட்டில் இருந்தது. பின்னர் ஒருங்கிணைந்த சேலம் மாவட்டம் உருவாக்கப்பட்டு அதன் தலைநகராக திருப்பத்தூர் இருந்தது. ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட கலெக்டர் அலுவலகம் இன்று ரெயில்நிலையமாக இருக்கிறது. முதல்-அமைச்சர் ஜெயலலிதா காட்டிய வழியில் நடைபெறும் அரசால் திருப்பத்தூர் புதிய மாவட்டமாக தோற்றுவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் நலன்கருதி திருப்பத்தூர் மெயின்ரோட்டில் 20 ஏக்கரில் அனைத்து அரசு அலுவலகங்களும் அமைக்கப்படும்.

இந்த மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் துரைமுருகன் பல்வேறு தவறான கருத்துகளை பரப்பி வருகிறார். கர்நாடகா அரசு மார்க்கண்டேய நதியில் அணை கட்டுவதற்கான பணிகளை தொடர்ந்து மேற்கொண்டதால், அதனை தடுத்து நிறுத்தக்கோரி அ.தி.மு.க.அரசு சுப்ரீம் கோர்ட்டில் இடைக்கால மனுதாக்கல் செய்தது. விசாரணையின்போது மூத்த வழக்கறிஞர்கள் வாதத்தை எடுத்துரைத்தனர். உச்சநீதிமன்ற தீர்ப்பில் தமிழக அரசின் இடைக்கால மனுவை ஏற்றுக்கொள்ளாமல், இப்பிரச்சினைக்கு தீர்வு காண நடுவர் குழுவை அமைக்க மத்திய அரசை நாடுமாறு உத்தரவிடப்பட்டது. தமிழக அரசின் அசல் வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. அதன் அடுத்த கட்ட விசாரணை 10.1.2020-ல் எடுத்துக்கொள்ளப்படும் என்று உத்தரவிட்டுள்ளது.

இடைக்கால மனுவுக்கு தான் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளதே தவிர இன்னும் அசல் வழக்கு அப்படியே இருக்கிறது. இந்த அசல் வழக்கு 10.1.2020 அன்று விசாரணைக்கு வரஉள்ளது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்து சட்டவல்லுனர்களுடன் கலந்தாலோசித்து தென்பெண்ணையாற்று விவசாயிகளின் உரிமை நிலை நாட்டப்படும்.

மத்திய அரசு கொண்டுவந்த அணை பாதுகாப்பு சட்டமசோதாவால் தமிழ்நாடு வேளாண் பெருமக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் தமிழ்நாட்டு உரிமைக்கு எந்தவித பாதிப்புமின்றி இருக்க நமது அமைச்சர் பெருமக்கள் டெல்லிக்கு சென்று மத்திய நீர்வளஆதாரத்துறை அமைச்சரை சந்தித்து கோரிக்கை வைத்தனர். அதனால், அந்த சட்டமசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

முதல்-அமைச்சர் சிறப்பு குறைதீர்வு கூட்டம் மூலம் பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு அவர்களது பிரச்சினைக்கு உடனுக்குடன் தீர்வு காணப்படுகிறது. வயது முதிர்வு காரணமாக 5 லட்சம் பேருக்கு ஓய்வூதியமாக மாதம் ரூ.1000 கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பொங்கலுக்கு அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 பொங்கல் பரிசு வழங்கப்பட்டது. இந்த ஆண்டும் 2½ கோடி அட்டைதாரர்களுக்கு ரூ.1000 பொங்கல் பரிசு வழங்கப்படும் என கள்ளக்குறிச்சி மாவட்ட தொடக்க விழாவில் அறிவித்தேன்.

ஒரே ஆண்டில் 5 மாவட்டங்கள் பிரிக்கப்படும் பெருமை ஜெயலலிதாவின் அரசையே சாரும். அதுவும் ஒரே நாளில் 2 மாவட்டங்களை தொடங்கி வைக்கும் வரலாறும் ஜெயலலிதா அரசையே தான் சேரும். புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டு உள்ளதால், பொதுமக்கள் கலெக்டர்களை 30 கிலோமீட்டரில் எளிதாக சந்திக்கலாம். நிர்வாகமும் சிறப்பாக இருக்கும். மக்களின் குறைகளும் விரைவில் தீர்க்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story