வெடிகுண்டு மிரட்டலா? மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் போலீசார் குவிப்பு


வெடிகுண்டு மிரட்டலா? மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் போலீசார் குவிப்பு
x
தினத்தந்தி 29 Nov 2019 4:15 AM IST (Updated: 29 Nov 2019 12:28 AM IST)
t-max-icont-min-icon

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தாக தகவல் பரவியதை தொடர்ந்து, போலீசார் குவிக்கப்பட்டதால் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை, 

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு உள்ளூர் மட்டுமில்லாமல், வெளியூர், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு திடீரென்று மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றிலும் போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுதவிர ஆவணி மூலவிதிகள், கோவிலை சுற்றியுள்ள தெருக்கள் என மொத்தம் 350-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டனர்.

துப்பாக்கி ஏந்திய போலீசாரும் வீதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். வெடுகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மோப்பநாய் உதவியுடன் அனைத்து பகுதியிலும் சோதனை மேற்கொண்டனர். இதன் மூலம் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு வளையத்திற்குள் வந்தது.

இது குறித்து போலீஸ் வட்டாரத்தில் கூறும் போது, உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து தமிழக டி.ஜி.பி. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் பாதுகாப்பை பலப்படுத்துப்புமாறு உத்தரவிட்டார். அதை தொடர்ந்து மதுரை போலீஸ் கமிஷனர் டேவிட்சன்தேவாசீர்வாதம் இரவோடு இரவாக மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் நகரில் உள்ள முக்கிய சோதனை சாவடிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளதாக தெரிவித்தனர்.

இதற்கிடையே பாதுகாப்பு ஏற்பாடுகளை மதுரை போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் நேற்று ஆய்வு செய்தார்.

அவரிடம் கேட்ட போது, பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டும், வேறு சில காரணங்களுக்காகவும் மீனாட்சி அம்மன் கோவிலில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளோம் என்றார்.

இதற்கிடையே மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததாகவும், அதனாலேயே பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் இதை போலீசார் உறுதி செய்ய மறுத்துவிட்டனர்

Next Story