செல்போனில் ‘பப்ஜி கேம்’ விளையாடுவதை தாய் கண்டித்ததால் - கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை


செல்போனில் ‘பப்ஜி கேம்’ விளையாடுவதை தாய் கண்டித்ததால் - கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 29 Nov 2019 6:00 AM IST (Updated: 29 Nov 2019 1:07 AM IST)
t-max-icont-min-icon

செல்போனில் ‘பப்ஜி கேம்’ விளையாடுவதை தாய் கண்டித்ததால் மனம் உடைந்த கல்லூரி மாணவி, தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

திருவொற்றியூர்,

திருவொற்றியூர் காலடிப்பேட்டை செட்டித்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ரகுபதி. இவர், வெல்டிங் வேலை செய்து வருகிறார். இவருடைய மகள் வித்யாஸ்ரீ (வயது 18). இவர், திருவொற்றியூர் அரசு கலைக்கல்லூரியில் பி.ஏ. தமிழ் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

வித்யாஸ்ரீ நேற்று காலை தனது செல்போனில் யாருடனோ சேர்ந்து ‘பப்ஜி கேம்’ விளையாடியதாக தெரிகிறது. இதனைப்பார்த்த அவரது தாய், காலையிலேயே புத்தகத்தை எடுத்து படிக்காமல் இப்படி செல்போனில் ‘கேம்’ ஆடுகிறாயே?” என்று மகளை திட்டிவிட்டு கடைக்கு சென்றுவிட்டார்.

தாய் திட்டியதால் மனமுடைந்த மாணவி வித்யாஸ்ரீ, வீட்டில் யாரும் இல்லாதநேரத்தில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். கடைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பி வந்த அவருடைய தாய், வெகு நேரமாக கதவை தட்டியும் வித்யாஸ்ரீ கதவை திறக்காததால் சந்தேகம் அடைந்தார்.

பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, தனது மகள் வித்யாஸ்ரீ தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மகளின் உடலை பார்த்து அவர் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த திருவொற்றியூர் போலீசார், தூக்கில் தொங்கிய மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து, செல்போனில் ‘பப்ஜி கேம்’ விளையாடுவதை தாய் கண்டித்ததால் மாணவி தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என விசாரித்து வருகின்றனர்.

Next Story