கஞ்சா செடிகள் பயிரிட்ட விவகாரத்தில் காங்கிரஸ் நிர்வாகிக்கு தொடர்பு போலீசார் விசாரணையில் அம்பலம்


கஞ்சா செடிகள் பயிரிட்ட விவகாரத்தில் காங்கிரஸ் நிர்வாகிக்கு தொடர்பு போலீசார் விசாரணையில் அம்பலம்
x
தினத்தந்தி 29 Nov 2019 4:45 AM IST (Updated: 29 Nov 2019 1:35 AM IST)
t-max-icont-min-icon

தரகம்பட்டி அருகே கஞ்சா செடிகள் பயிரிட்ட விவகாரத்தில் காங்கிரஸ் நிர்வாகிக்கு தொடர்பு இருப்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

தரகம்பட்டி,

கரூர் மாவட்டம், தரகம்பட்டி அருகே உள்ள மைலம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஜாகீர்உசேன் (வயது 55). இவருக்கு சொந்தமாக மாமரத்துப்பட்டியில் 10 ஏக்கர் தோட்டம் உள்ளது. இவர் தனது தோட்டத்தினை சின்னதேவன்பட்டியை சேர்ந்த கடவூர் வடக்கு வட்டார காங்கிரஸ் பொறுப்பாளர் அருணாச்சலம் என்பவருக்கு 2 வருடங்களுக்கு குத்தகைக்கு விட்டுள்ளார். தற்போது அருணாச்சலம் பெங்களூருவில் வசித்து வருகிறார்.

இதனால் தோட்டத்தை அருணாச்சலத்தின் மாமனார் பஞ்சப்பட்டியை சேர்ந்த தங்கவேல் (70) பராமரித்து வருகிறார். இவருக்கு உதவியாக தேனி மாவட்டம், வருசநாட்டை சேர்ந்த முருகன் என்பவர் வேலை செய்து வருகிறார். இந்தநிலையில் 2 பேரும் சேர்ந்து தோட்டத்தில் கஞ்சா செடிகள் பயிரிட்டுள்ளனர்.

3 பேர் மீது வழக்கு

இது தொடர்பாக திருச்சி போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு நேற்றுமுன்தினம் தகவல் வந்தது. இதையடுத்து போதை பொருள் தடுப்பு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு டோங்கரே, கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் மற்றும் போலீசார் அந்த தோட்டத்தில் நுழைந்து அதிரடி சோதனை நடத்தினர். அப்போது மல்லிகை தோட்டத்தில் ஊடுபயிராக ஒரு ஏக்கர் அளவிற்கு கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து தோட்டத்தை பராமரித்து வந்த தங்கவேல் மற்றும் உதவியாளர் முருகனை பிடித்து சிந்தாமணிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், கஞ்சா செடிகள் பயிரிட்டதில் பெங்களூருவில் உள்ள அருணாச்சலத்திற்கும் தொடர்பு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து காங்கிரஸ் நிர்வாகி அருணாச்சலம், அவரது மாமனார் தங்கவேல், உதவியாளர் முருகன் ஆகிய 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், பெங்களூருவில் உள்ள அருணாச்சலத்திடமும் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். பின்னர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஒரு ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த கஞ்சா செடிகள் முழுவதையும் அகற்றி, விசாரணைக்காக பாதுப்பான இடத்தில் வைத்துள்ளனர்.


Next Story