திருச்சி மாவட்டத்தில் பரவலாக மழை


திருச்சி மாவட்டத்தில் பரவலாக மழை
x
தினத்தந்தி 29 Nov 2019 4:30 AM IST (Updated: 29 Nov 2019 2:08 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது.

திருச்சி,

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்து உள்ளது. கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வரும் வேளையில், தமிழகத்தின் மையப்பகுதியான திருச்சி மாவட்டத்தில் நேற்று அதிகாலை பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. ஏற்கனவே, மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர், திருச்சி முக்கொம்புவில் இருந்து காவிரியில் பாய்ந்து கல்லணை நோக்கி செல்கிறது.

தொடர்ந்து காவிரி தண்ணீர் பல்வேறு கிளை வாய்க்கால் மூலம் ஏரி, குளங்களில் நிரப்பப்பட்டு வருவதால் அவைகள் நிரம்பி வருகின்றன. தற்போது பெய்த மழையால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

குட்டைபோல தேங்கிய மழைநீர்

திருச்சி மாநகரில் பெய்த மழை நீர், பள்ளமான இடங்களில் தேங்கி குட்டைபோல காணப்பட்டன. மேலும் பல்லாங்குழி சாலைகளில் நிரம்பி அவை வெளியேற வழியின்றி தேங்கி நின்றன. திருச்சி-ஜங்சன் ரெயில்வே மேம்பாலத்தின்கீழ் மதுரை ரோடு கிராப்பட்டி செல்லும் வழியில் மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது.

அதிகாலை பெய்த மழையால் திருச்சி காந்தி மார்க்கெட்டுக்கு காய்கறிகள் கொண்டுவரப்பட்ட லாரிகளில் இருந்து அவற்றை இறக்குவதற்கு சுமைதூக்கும் தொழிலாளர்கள் மிகவும் சிரமப்பட்டனர். மேலும் புறநகர் பகுதியான மணப்பாறை, துறையூர், உப்பிலியபுரம், மருங்காபுரி, முசிறி, வையம்பட்டி உள்பட பல்வேறு இடங்களில் மிதமானது முதல் பலத்த மழையும் பெய்தது.

மழை அளவு

திருச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் நேற்று காலை 8 மணி நிலவரப்படி பதிவான மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

சமயபுரம்-53, தேவிமங்கலம்-43, மணப்பாறை-35.20, திருச்சி டவுன்-29, புள்ளம்பாடி-25.40, வாத்தலை-24, துறையூர்-21, திருச்சி ஏர்போர்ட்-21, துவாக்குடி-20, முசிறி-20, நவலூர் குட்டப்பட்டு-18, பொன்மலை-16, திருச்சி ஜங்சன்-15.80, மருங்காபுரி-12.20, குப்பம்பட்டி-10, தென்பரநாடு-10.

Next Story